கர்ப்பிணி பெண்களின் கண்கண்ட தெய்வம்!
தஞ்சாவூர் மாவட்டம் திருக்கருகாவூரில் முல்லைவனநாதர் கோவில் உள்ளது. இங்குள்ள கர்ப்பரட்சாம்பிகை, பெண்களுக்கு கண்கண்ட தெய்வமாக விளங்குகிறாள். திருமணம், குழந்தைப்பேறுக்காக இங்கு வழிபடுவது சிறப்பு.தல வரலாறு: முல்லை வனமாக இருந்த இத்தலத்தில் நித்துருவர்,வேதிகை என்ற தம்பதியர் வாழ்ந்தனர். குழந்தை இல்லாத இவர்கள் இங்கிருந்த முல்லைவனத்து நாதரையும், அம்மனையும் வழிபட்டு வந்தனர். இதனையடுத்து வேதிகை கருவுற்றாள். ஒருநாள் நித்துருவர் வெளியில் சென்றிருந்த நேரத்தில் வேதிகை கர்ப்ப அவஸ்தையால் சிரமப்பட்டாள். அப்போது ஊர்த்துவபாதர் என்ற முனிவர் பிச்சை கேட்டு வந்தார். மயக்க நிலையில் இருந்த வேதிகையால் அவருக்கு உணவிட முடியவில்லை. இதை அறியாமல் முனிவர் அவள் மீது கோபம் கொண்டு சபித்தார். சாபத்தால் வேதிகையின் கரு கலைந்தது. வேதிகை மனமுருகி வழிபட, அம்மன் நேரில் தோன்றி கலைந்த கருவை ஒரு குடத்துள் ஆவாகனம் செய்து குழந்தை உருவாகும் நாள் வரையிலும் காப்பாற்றி கொடுத்தாள். குழந்தைப் பேறு பெற்ற வேதிகை அம்மனிடம், இத்தலத்தில் கர்ப்பரட்சாம்பிகையாக எழுந்தருளி கர்ப்பிணி பெண்களை காக்கும்படி வேண்டினாள். இதனடிப்படையில் இத்தலத்தில் கோவில் அமைக்கப்பட்டதாக தலவரலாறு கூறுகிறது.கண்கண்ட தெய்வம்: இங்கு கர்ப்பரட்சாம்பிகை கர்ப்பிணி பெண்களுக்கு கண்கண்ட தெய்வமாக விளங்குகிறாள். இடது கையை இடுப்பில் வைத்த நிலையில் காட்சி தரும் இவள் சதுர்புஜ அம்பிகையாக நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். கன்னிப்பெண்கள் அம்மன் சன்னிதியில் நெய்யால் மெழுகி கோலமிட்டு அர்ச்சனை செய்தால் விரைவில் திருமண பாக்கியம் உண்டாகும். குழந்தை பேறு இல்லாதவர்கள் அம்மன் பாதத்தில் வைத்து மந்திரித்த நெய்யை 48 நாள் தொடர்ந்து சாப்பிட்டு வர விரைவில் குழந்தைப்பேறு வாய்க்கப் பெறுவர். கர்ப்பிணி பெண்களுக்கு அம்மன் பாதத்தில் வைத்து மந்திரித்த விளக்கெண்ணெய் கொடுக்கப்படுகிறது. இதை பிரசவ வலியின் போது வயிற்றில் தடவினால் பேறுகால ஆபத்து நீங்கும். பிரார்த்தனை நிறைவேறிய பின் பெண்கள் குழந்தைக்கு தொட்டில் கட்டி எடைக்கு எடை பழங்கள், அரிசி, வெல்லம், கற்கண்டு ஆகியவற்றை துலாபாரமாக செலுத்துகின்றனர். பிரதோஷத்தில் புனுகு: கருவறையில் மூலவர் முல்லைவனநாதர் சுயம்பு மூர்த்தியாக வீற்றிருக்கிறார். இவர் புற்று மண்ணால் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அபிஷேகம் நடப்பதில்லை. சுவாமியின் திருமேனியில் புனுகுச் சட்டம் மட்டும் சாத்தப்படுகிறது. முல்லைக் காடான இங்கு சிவலிங்கத்தைச் சுற்றி முல்லைக் கொடிகள் சுற்றிக் கிடந்தன. முல்லைக் கொடி படர்ந்திருந்த வடுவை சிவலிங்கத்தில் இப்போதும் தரிசிக்க முடியும். தோல் வியாதி உள்ளவர்கள் முல்லைவனநாத சுவாமிக்கு வாசனைத் திரவியமான புனுகுச் சட்டம் சாத்துவதாக வேண்டிக் கொண்டால் விரைவில் நோய் நீங்கும் என்பது ஐதீகம். பக்தர்கள் வளர்பிறை பிரதோஷத்தன்று மாலையில் இதனை நேர்த்திக் கடனாகச் செலுத்துகின்றனர். கார்த்திகை சோம வாரத்தன்று சுவாமிக்கு குவளை சாத்தி 108 சங்காபிஷேகம் சிறப்பாக நடக்கிறது. அனுக்கிரக மூர்த்திகள்: சுவாமி, விநாயகர், நந்தி மூன்றுமே சுயம்பு மூர்த்திகள். இதில் சுவாமி மட்டும் மண்ணால் ஆனவர். மற்ற இருவரும் சிலை வடிவாக உள்ளனர். நவக்கிரகங்களில் எல்லா கிரகங்களும் சூரியனை நோக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. சூரியனுக்கு நேர் எதிரில் குருபகவான் வீற்றிருக்கிறார். அதனால் இங்கு எல்லா கிரகங்களும் அனுகிரக மூர்த்திகளாக இருக்கின்றனர். ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இத்தலம் ஞான சம்பந்தர், திருநாவுக்கரசரால் பாடல் பெற்றதாகும். தலவிருட்சமாக முல்லைக்கொடி இருக்கிறது. பால்குளம் என்னும் தீர்த்தம் இங்குள்ளது. இருப்பிடம்: கும்பகோணத்தில் இருந்து பட்டீஸ்வரம் சாலையில் ஆவூர் வழியாக 20 கி.மீ.,நேரம் : காலை 6 .00 மதியம் 12.00 மணி, மதியம் 3.00 - இரவு 8.00 மணிதொலைபேசி: 04374 - 273 423.