உள்ளூர் செய்திகள்

கல்விக் கோவிலில் வியாழக்கிழமை வழிபாடு

சுந்தரருக்கு குருநாதராக அருள்புரிந்த சிவன் கடலூர் அருகிலுள்ள திருத்தளூரில் சிஷ்டகுருநாதேஸ்வரராக வீற்றிருக்கிறார். கல்விக்கோவிலான இங்கு மாணவர்கள் வியாழனன்று வழிபடுவது சிறப்பு. தல வரலாறு: கைலாயத்தில் சிவன்-பார்வதி திருமணம் நடந்த போது, அகத்தியர் தென்திசைக்கு வந்தார். வழியில் அவர் பல தலங்களில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்தார். அவர் இத்தலத்திற்கு வந்த போது சிவனின் திருமணத்தை காண விரும்பி சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அகத்தியருக்கு சிவன் மணக்கோலத்தில் காட்சியளித்தார். இங்குள்ள சிவன் மேற்கு பார்த்தும், அம்பிகை சிவலோக நாயகி வடக்கு நோக்கியும் இருக்கிறாள். மேற்கு பார்த்த சிவனுக்கு சக்தி அதிகம். அம்பிகை பொதுவாக கிழக்கு அல்லது தெற்கு நோக்கி இருப்பாள். வடக்கு நோக்கி அம்பிகையை அபூர்வமாகவே அமைப்பார். இது குபேரதிசை என்பதால் இவளை வணங்கி செல்வவளத்தைப் பெறலாம். குருவாக வந்த சிவன்: சுந்தரர் இத்தலத்திற்கு சென்ற போது தென்பெண்ணையாற்றில் வெள்ளம் ஓடியது. எனவே கரையில் இருந்த படியே, மறுகரையில் இருந்த சிவனை நோக்கி தேவாரம் பாடினார். அப்போது அங்கு ஒரு வயதான தம்பதி வந்தனர். அவர்கள் சுந்தரரை படகில் ஏற்றிக் கொண்டு மறு கரைக்கு சென்றனர். அங்கு சிவன் இல்லை. சுந்தரரின் கண்ணுக்கு தெரியாமல் மறைந்து கொண்டார். அப்போது முதியவர் அவரிடம், 'நீங்கள் தேடுபவர் மேலே இருக்கிறார்,' என்று சொல்லி விட்டு மறைந்தார். சுந்தரர் மேலே பார்த்த போது சிவன், அம்பிகையுடன் ரிஷப வாகனத்தில் காட்சி தந்தார். முதியவர்களாக வந்தது சிவனும், பார்வதியும் என்பதை சுந்தரர் தெரிந்து கொண்டார். சுந்தரர் சிவனிடம் தனக்கு உபதேசம் செய்யும் படி வேண்டினார். சிவனும் குருவாக இருந்து தவநெறிகளை உபதேசம் செய்தார். எனவே 'தவநெறி ஆளுடையார்' என்றும், 'சிஷ்டகுரு நாதேஸ்வரர்' என்றும் அவருக்கு பெயர்கள் வந்தன. வியாழனன்று இவருக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. கல்வியில் சிறப்பிடம் பெற, சிறந்த கல்லூரியில் விரும்பிய படிப்பில் சேர இங்கு வழிபாடு செய்கிறார்கள்.நந்திக்கொடி பிரதோஷம்: நந்திக்கு பிரதோஷத்தின் போது, நந்தியின் படம் அச்சிடப்பட்ட கொடியைக் கட்டி வழிபடும் வழக்கம் முன்பு இருந்தது. காலப் போக்கில் இவ்வழக்கம் மறைந்து விட்டது. இலங்கையில் உள்ள சிவாலயங்களில் இந்த வழிபாடு தற்போதும் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த அரிய வழக்கம் இந்தக்கோவிலில் இருக்கிறது. சிவன் லிங்க வடிவில் இருக்கிறார். பவுர்ணமி மற்றும் திங்கள்கிழமைகளில் இவருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. திருமண, புத்திர தோஷம் நீங்க நெய் தீபம் ஏற்றி, வில்வார்ச்சனை செய்து வழிபடுகின்றனர். சித்திரை மாதம் முதல் வாரத்தில் மாலைநேரத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது.சிறப்பம்சம்: இங்கு முருகன் ஆறுமுகத்துடன் இருக்கிறார். ஆதிகேசவர் தெற்கு நோக்கி இருக்கிறார். சுந்தரர் செங்கோலுடன் காட்சி தருகிறார். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி சன்னிதி அருகே சுந்தரருக்கு காட்சி தந்த சிவனின் சிற்பம் உள்ளது. பிரகாரத்தில் நர்த்தன விநாயகர், பைரவர், சூரிய லிங்கம், ராமலிங்கம், பீமலிங்கம், சூரிய பகவான், ஆதிகேசவ பக்தவச்சலர், கஜலட்சுமி ஆகியோர் இருக்கின்றனர். தலவிருட்சமாக கொன்றை மரமும், தீர்த்தமாக சூரிய புஷ்கரிணியும் உள்ளது. கோவிலுக்கு எதிரே சுந்தரரை முதியவர் வடிவில் வந்து சிவன் தடுத்த இடத்தில் தடுத்தாட்கொண்ட ஈஸ்வரர் சன்னிதியும், அஷ்டபுஜ காளி சன்னிதியும் உள்ளது. கோவில் எதிரில் மெய்க்கண்டாரின் சீடரான அருணந்தி சிவாச்சாரியார் முக்தியடைந்த இடம் இருக்கிறது.இருப்பிடம்: கடலூரில் இருந்து 24 கி.மீ., தூரத்தில் பண்ருட்டி. அங்கிருந்து 8 கி.மீ., திறக்கும் நேரம்: காலை 6.00 - 10.00மணி, மாலை 5.00 - இரவு 8.00 மணிஅலை/தொலைபேசி: 94448 07393, 04142 - 248 498.