உள்ளூர் செய்திகள்

பயணம் இனிதாக அமைய...

நாம் வெளியூர், வெளிநாடுகளுக்கு பயணம் செய்வோம். நமது பயணம் வெற்றிகரமாக அமைய பச்சைக் கொடியை காட்டும் தாயாக இருக்கிறாள் கோயம்புத்துார் புலியகுளத்தில் உள்ள மாரியம்மன். முன்பு இப்பகுதியில் பெரிய குளமும் புலிகளும் இருந்தன. அதானால் இவ்வூர் புலியகுளம் என்றானது. கூத்தப்பண்ணாடி என்பவர் வியாபாரத்தை முடித்துவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தபோது, யாரோ தன்னை அழைப்பதை உணர்ந்தார். சுற்றிப் பார்த்தபோது யாரும் இல்லை. அப்போது அங்கு அம்மன் சிலை இருப்பதை கண்டார். பின் அச்சிலையை மாட்டு வண்டியில் ஏற்றி புறப்பட தயாரானதும் மாடுகள் நகரவில்லை. அம்மனிடம் வேண்டினார். அப்போது அசரீரியாக, 'நான் மாரியம்மன். என்னை எடுத்துச் சென்று வழிபாடு செய்' என ஒலித்தது. மாடுகள் நகர ஆரம்பித்தன. விரைவில் கோயில் கட்டி அம்மனை பிரதிஷ்டை செய்தார். கோயிலிற்கு முன்பு கோபுரத்துடன் கூடிய குறிஞ்சி மண்டபம் உள்ளது. இரவில் அம்மன் இங்கு அமர்ந்து ஊரை காவல் காக்கிறாள். பொதுவாக அம்மன் கோயிலில் சூலாயுதம்தான் இருக்கும். ஆனால் இங்கு வேலாயுதம் உள்ளது. நடை சாத்தியிருக்கும் போது பக்தர்கள் இந்த வேலாயுதத்தின் முன் கற்பூரம் ஏற்றிச் சென்றால், பயணம் பாதுகாப்பாக அமையும். நாகம், உடுக்கை, சூலம், அட்சய பாத்திரத்தை ஏந்தி நின்ற கோலத்தில் மாரியம்மன் காட்சி தருகிறாள். திருவிழா நாட்களில் இவ்வூர் மக்கள் மிளகாய் அரைப்பதோ உணவில் உப்பு சேர்ப்பதோ இல்லை. ஆடி கடைசி வெள்ளியன்று எலுமிச்சம்பழத்தில் விளக்கேற்றுவர். பழநியைப் போலவே இங்கும் முருகன் அருள்பாலிக்கிறார். ஆதிசேஷனை சுற்றி வாசுகி, அனந்தன், குளிகன், கார்க்கோடகன், தக்கன், பதுமன், சங்கன், பாலன் ஆகிய எட்டு நாகர்கள் உள்ளனர். இங்கு சனீஸ்வரருக்கு பக்தர்களே நல்லெண்ணெய் அபிஷேகம் செய்கின்றனர். வேப்பமரம் தலவிருட்சமாக உள்ளது. எப்படி செல்வது: கோயம்புத்துாரில் இருந்து 6 கி.மீ., விசேஷ நாள்: ஆடி செவ்வாய் வெள்ளி, ஆடிப்பூரம், ஆடிப்பெருக்கு தொடர்புக்கு: 0422 - 231 3822நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 4:00 - 9:00 மணிஅருகிலுள்ள தலம்: கொழுமம் கோட்டை மாரியம்மன் கோயில் 90 கி.மீ., நேரம்: காலை 7:30 - 1:00 மணி; மதியம் 3:00 - 8:00 மணிதொடர்புக்கு: 04252 - 278 001, 278 510