உள்ளூர் செய்திகள்

தும்கூர் யோக நரசிம்மர்

யோகநரசிம்மர் என்றால் சோளிங்கர் திருத்தலம்தான் நினைவுக்கு வரும். இவரைப்போலவே கர்நாடகா தும்கூர் அருகில் தேவராயனதுர்காவில் 3940 அடி உயரத்தில், மலைமேல் கோயில் கொண்டுள்ளார் யோக நரசிம்மர். சத்ய யுகத்தில் பிரம்மா ஆயிரம் ஆண்டுகள் மஹாவிஷ்ணுவை நோக்கி தவம் செய்தார். அப்போது மஹாவிஷ்ணு இந்த மலையில்தான் யோக நரசிம்மராக காட்சியளித்தார். அப்போது மலையின் பெயர் உத்கிலா பர்வதம். திரேதா யுகத்தில் சீதை, லட்சுமணனோடு இங்கு வந்த ஸ்ரீராமபிரான் இந்த நரசிம்மரை தரிசித்துள்ளார். அப்போது இவர் உருவாக்கிய நீருற்று ஒன்று, இன்றும் இங்குள்ளது. ஸ்ரீராமபிரானின் பாதமும் அருகில் உள்ளது. அப்போது மலையின் பெயர் சிம்ஹாத்ரி பர்வதம். துவாபர யுகத்தில் முனிவர்கள் சிலரும் நரசிம்மரை வணங்கியுள்ளனர். அப்போது மலையின் பெயர் சித்தகிரி. இப்படி மூன்று யுகத்தை கண்டவர்தான் யோகநரசிம்மர். இப்பகுதியை வென்ற மைசூரு மன்னர் கிருஷ்ணராஜ உடையார்- 3, இதன் பெயரை தேவராயன துர்கா என மாற்றினார். சுற்றிலும் பச்சைப்பசேல் மரங்கள், செடி, கொடிகள் என இப்பகுதி பசுமையாக உள்ளது. இந்தக் குன்றின் கீழும், மேலும் நரசிம்மர் உள்ளார். கீழேயுள்ள நரசிம்மர் மஹாலட்சுமியை மடியில் அமர்த்திக் கொண்டு கம்பீரமாய் காட்சி தருகிறார். இவரை போக நரசிம்மர் என்றும் அழைப்பர். மலைக்கு மேலே உள்ளவர் யோக நரசிம்மர். சுவாதி நட்சத்திரத்தன்று இவருக்கு திருமஞ்சனம் செய்து, வஸ்திரம் சாற்றினால் எதிரி பயம் விலகும். நினைத்த செயல் நிறைவேறும். இவரைக் கடந்து இன்னும் மலை மீது ஏறினால் கும்பி நரசிம்மரை தரிசிக்கலாம். இவருக்கு அருகில் ஆஞ்சநேயர், கருடனையும் பார்க்கலாம். குன்றுக்கு அருகில் மஹாலட்சுமி தாயாருக்கு தனிக்கோயில் உள்ளது. திருப்பதியைப் போல் மஹாலட்சுமி தாயார் அருள்பாலிப்பது சிறப்பு. எப்படி செல்வது: பெங்களூருவில் இருந்து தும்கூர் செல்லும் வழியில் 65 கி.மீ., விசேஷ நாள்: நரசிம்ம ஜெயந்திநேரம்: காலை 6:00 - 10:00 மணி: மாலை 5:00 - 8:00 மணிதொடர்புக்கு: 078298 26756அருகிலுள்ள தலம்: பெங்களூரு குட்டஹள்ளி பிரளயகால வீரபத்திரர் கோயில் 70 கி.மீ., நேரம் காலை 8:00 - 11:00 மணி; மாலை 6:00 - 8:00 மணிதொடர்புக்கு: 080 - 2661 8899