உள்ளூர் செய்திகள்

பனை மரத்தடி முருகனுக்கு விசாக சிறப்பு விருந்து

சென்னை அருகிலுள்ள புகழ்மிக்க முருகன் தலம் திருப்போரூர். இங்கு வைகாசி விசாகத்தை முன்னிட்டு முருகனுக்கு மாலை நேர விருந்தாக பாவாடை நைவேத்யம் நடக்கும். இந்த முருகன் சிலை பனைமரத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டதாகும்.தல வரலாறு: முருகப்பெருமான் அசுரர்களுடன் மூன்று இடங்களில் போரிட்டார். திருச்செந்தூரில் கடலில் போரிட்டு மாயையை (உலகம் நிலையானது என்ற எண்ணம்) அடக்கினார். திருப்பரங்குன்றத்தில் நிலத்தில் போர் செய்து கன்மத்தை (பாவ புண்ணியத்தால் ஏற்படும் பலன்கள்) அழித்தார். போரூரில் விண்ணில் நின்று போர் புரிந்து ஆணவத்தை அடக்கினார். கந்தசுவாமி என்னும் பெயரில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். பொதிகை செல்லும் வழியில் அகத்தியர் இங்கு தங்கி முருகனை வழிபட்டார். இங்கு முருகன் தாரகாசுரனுடன் பொருதலால் (போரிட்டதால்) இத்தலம் போரூர், தாருகாபுரி, சமராபுரி என வழங்கப்படுகிறது. கந்தசஷ்டி கவசத்தில் 'சமராபுரி வாழ் சண்முகத்தரசே' என்ற வரி வரும். அந்த தலம் இதுதான். பாவாடை நைவேத்யம்: இந்தக் கோவில் ஒரு காலத்தில் மண்ணில் புதைந்து கிடந்தது. முருகன் சிலை ஒரு பனை மரத்தடியில் இருந்தது. மதுரையைச் சேர்ந்த சிதம்பர சுவாமியின் கனவில் தோன்றிய முருகன், இது பற்றி அவருக்கு தெரிவித்தார். சிதம்பர சுவாமி இங்கு வந்து, சிலையைக் கண்டெடுத்து பிரதிஷ்டை செய்து கோவில் எழுப்பினார். முருகன் மீது 726 பாடல்கள் பாடினார். வைகாசி விசாகத்தன்று தான், சிதம்பரம் சுவாமியின் குருபூஜையும் நடத்தப்படும். இந்நாளில், முருகன் எதிரே, சிதம்பர சுவாமியை எழுந்தருளச் செய்து, அவர் சுவாமியுடன் இரண்டறக் கலப்பது போல பாவனை செய்து வழிபடுவர். இன்று மாலையில் கருவறையில் பெருமளவில் அன்னம் (சோறு) குவித்து சுவாமிக்கு தீபாராதனை நடத்துவர். இதற்கு 'பாவாடை நைவேத்யம்' என்று பெயர்.யந்திர முருகன்: கந்தசுவாமி, சுயம்பு மூர்த்தியாக இருப்பதால் பூஜை நடத்த ஸ்ரீசக்கர யந்திரம் ஒன்றைப் பிரதிஷ்டை செய்துள்ளனர். கூர்ம (ஆமை) பீடத்தின் மேலுள்ள இந்த யந்திரத்தில், முருகனின் 300 திருப்பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. முருகனுக்கு பூஜை நடந்த பின், ஸ்ரீசக்கரத்திற்கு பூஜை செய்யப்படும். செவ்வாய் கிரகத்தின் அதிபதி என்பதால், செவ்வாய் தோஷம் நீங்க பக்தர்கள் ஸ்ரீசக்கரத்திற்கு திரிசதி அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். வாய் மீது கை வைத்துள்ள சிவனின் மடியில் அமர்ந்து, முருகன் உபதேசம் செய்யும் சிலையும், கையில் வில்லேந்தி, மயில்மேல் காலை வைத்தபடி சம்ஹார முத்துக்குமார சுவாமி சிலையும் இங்கு உள்ளன.அபிஷேகம் இல்லை: கோவில் அருகிலுள்ள குன்றில் கைலாசநாதர், பாலாம்பிகை கோவில் உள்ளது. இவ்வாறு மலையில் சிவனும், அடிவாரத்தில் முருகனுமாக அமைந்த தலம் இது. முன்பு, முருகன் சிலை மட்டும் இருந்தது. பின்னர் வள்ளி, தெய்வானையை பிரதிஷ்டை செய்தனர். முருகன் சுயம்புவாகத் தோன்றியவர் என்பதால் அபிஷேகம் கிடையாது. புனுகு மட்டும் சாத்துகின்றனர்.பனை பாத்திரம்: இந்தத் தலத்தில் முருகன் சிலையை கண்டெடுத்த போது, அது பனை மரத்தில் செய்த பாத்திரத்தால் மூடப்பட்டிருந்தது. இந்த பாத்திரத்தை தற்போதும் வைத்துள்ளனர். அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம் போல இந்தப் பானை செல்வத்தை தருவதாக ஐதீகம். தற்போதும் நைவேத்தியத்திற்கான அரிசியை இதில் தான் வைத்துள்ளனர்.அதிரச அம்பிகை: பிரகாரத்தில் வான்மீகநாதர், புண்ணிய காரணியம்மன் சன்னிதி உள்ளது. பக்தர்களுக்கு புண்ணியம் கிடைக்க காரணமாக இருப்பதால் இந்த அம்மனுக்கு இப்பெயர் வழங்கப்படுகிறது. கேதார கவுரி நோன்பன்று அம்மனுக்கு விசேஷ பூஜை நடக்கும். பெண்கள் சுமங்கலி பாக்கியம் வேண்டி, அம்மனுக்கு அதிரசம் படைத்து வழிபடுவர்.இருப்பிடம்: சென்னை - மாமல்லபுரம் சாலையில் 45 கி.மீ., செங்கல்பட்டில் இருந்து 25 கி.மீ., திறக்கும் நேரம்: காலை 6.00 - 12.30 மணி மாலை 3.30 - இரவு 9.00 மணி.தொலைபேசி: 044 - 2744 6226.