வேண்டியது நிறைவேறும்
காசியில் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி கங்கை பாய்வது போல திருப்புடை மருதுாரில் தாமிரபரணியும் பாய்கிறது. ஆதலால் இதனை தட்சிண காசி என்பர். இத்தல சிவபெருமானை தரிசித்தால் வேண்டுதல்கள் யாவும் நிறைவேறும்.மருத மரத்தில் சிவபெருமான் காட்சி கொடுத்த தலங்களாக கர்நாடகா ஸ்ரீசைலத்தையும் தஞ்சையிலுள்ள இடைமருதுாரையும் திருநெல்வேலியிலுள்ள திருப்புடைமருதுாரையும் போற்றுவர். இக்கோயிலின் வரலாறு 1200 ஆண்டு பழமை வாய்ந்தது. இப்பகுதியில் மன்னன் வீரமார்த்தாண்டவர்மன் வேட்டைக்கு வரும் போது அவர் எய்த அம்பு மான் ஒன்றின் மீது பட்டது. அது அங்கிருந்த மருதமரம் அருகே சென்று மறைந்தது. அவர் அங்கு சென்று பார்த்த போது மான் சிவலிங்கமாகி காட்சி தந்தது. அச்சிவலிங்கத்தையே நாறும்பூநாதர் என அழைக்கின்றோம். இத்தலத்து அம்பாளின் பெயர் கோமதியம்மன்.சிவனடியரான கருவூரார் இக்கோயிலுக்கு வந்த போது ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டது. சுவாமியை தரிசிக்க முடியாததால் இருந்த இடத்திலிருந்து பாடலைப்பாடி வழிபட்டார். இவரது பாடலை கேட்பதற்காக சுவாமி தனது இடது காதில் கை வைத்து சாய்வாகத் திரும்பினார். (தற்போதும் சாய்ந்த நிலையில் தான் சுவாமியும் இருக்கிறார்) அவரிடம் “ஆற்றுத்தண்ணீர் மீது நடந்து வருக” என்றார். அவரும் அவ்வாறே வர, ''இங்கே உம்மை தரிசிக்க வரும் பக்தர்களின் பிரார்த்தனைகளுக்கு இதைப்போலவே அருள வேண்டும்'' என்கிற வரத்தினை பெற்றார் கருவூரார். ஜாதகரீதியாக பிரச்னை உள்ளவர்கள் இவரை தரிசித்தால் நன்மை உண்டாகும். பிரதோஷமும் மஹா சிவராத்திரியும் வரும் நாளான (பிப்.18, 2023) மாலை 4:30 மணிக்கு 10,008 தீபங்கள் ஏற்றியும் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. எப்படி செல்வது: திருநெல்வேலியில் இருந்து 40 கி.மீ., விசேஷ நாள்: நவராத்திரி, சிவராத்திரி நேரம்: காலை 6:00 - 10:00 மணி; மாலை 5:00 - 7:30 மணிதொடர்புக்கு: 99624 51268அருகிலுள்ள தலம்: வீரவநல்லுார் பூமி நாதர் கோயில் 7 கி.மீ.,நேரம் : காலை 6:00 - 10:30 மணி; மாலை 5:00 - 7:00 மணிதொடர்புக்கு: 94864 27875