வெற்றி மேல் வெற்றி
எலுமிச்சை மாலை சாற்றி சுவாமி அம்பாளை வழிபட்டால் எல்லாமே வெற்றி தான். ஆமாம் அப்படி ஒரு கோயில் இருக்குங்க. வாங்க அக்கோயிலுக்கு செல்வோம். கண்குளிர தரிசிப்போம்.துறை என்ற சொல்லுக்கு வழி எனவும் பொருள். மனித வாழ்க்கைக்கு தேவையான அறிவுரைகளை தந்த ஏழு ரிஷிகள் வழிபட்ட சிவத்தலத்தை சப்த துறை கோயில்கள் என்பர். இவ்வூர் ஆற்றின் பெரிய பெரிய மணல் திட்டுக்களில் மக்கள் குடியேறியதாலும், வசிஷ்டர் பெயரான வசிட்டகுடி என்பதே திட்டக்குடியாக மருவியது என்பர். சப்ததுறை தலங்களில் ஐந்தாவது தலம் கடலுார் மாவட்டம் வெள்ளாற்றங்கரையில் உள்ள திட்டக்குடி. தானாக தோன்றிய சுயம்பு மூர்த்தியாவும், நோய் தீர்க்கும் மருத்துவர் என்பதால் சுவாமி வைத்தியநாதர் எனவும் பெயர் பெற்றார். வேங்கை மரங்கள் சூழ்ந்த இப்பகுதி வேங்கைவனமாக இருந்தது. ஆதலால் அம்பாளுக்கு வேங்கை வனநாயகி என்று பெயர். சுவாமிக்கு வலப்புறத்தில் அமைந்திருக்கும் வேங்கை வனநாயகியை தரிசிப்பவருக்கு திருமணம் கைகூடும். சப்தரிஷிகளில் ஒருவரான வசிஷ்டருக்கும் அருந்ததிக்கும் திருமணம் நடைபெற்ற தலம் என்பது கூடுதல் சிறப்பு. வசிஷ்டரின் பசுவான காமதேனு இப்பகுதியில் இருந்த புற்றின் மீது தெரியாமல் கால் வைக்க அதற்குள் இருந்த லிங்கத்தின் மீது ரத்தம் பீறிட்டது. அதை தணிப்பதற்கு பாலை சுரந்து காமதேனு வழிபட்டது. அவரை காண வந்த சூரிய குல மன்னன் மனுவிடம் கோயில் கட்ட பணித்தார். ராவணனைக்கொன்ற தோஷம் நீங்க ராமரும், சோழ மன்னன் குலோத்துங்கனின் கண் பார்வை பெற வழிபட்டு நற்கதி பெற்றுள்ளனர். பாண்டியர், விஜயநகர மன்னர்களும் சுவாமியை வழிபாடு செய்து திருப்பணிகள் செய்துள்ளனர். திருவண்ணாமலையை சுற்றி அஷ்ட லிங்கம் இருப்பது போல வைத்தியநாதரை சுற்றி பிரகாரத்தில் அஷ்ட லிங்கங்கள் அமைந்திருப்பது இங்குள்ள சிறப்பு. விநாயகர், முருகர், அறுபத்து மூவர், தட்சிணாமூர்த்தி, பைரவர் நவக்கிரக சன்னதிகளுக்கும் உள்ளன. தலமரம் வேங்கை. தீர்த்தம் காண்டீப தீர்த்தம். எப்படி செல்வது: விருத்தாசலத்தில் இருந்து 30 கி.மீ., விசேஷ நாள்: ஆடி பிரமோற்ஸவம், புரட்டாசி நவராத்திரி, மாசி சிவராத்திரி பங்குனி தேர்நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 4:00 - 9:00 மணிதொடர்புக்கு: 04143 - 256 008 அருகிலுள்ள தலம் : திருவட்டத்துறை திருக்கோயில் 10 கி.மீ.,நேரம்: காலை 6:00 - 11:00 மணி; மாலை 6:00 - 8:00 மணிதொடர்புக்கு: 04143 - 246 467