உள்ளூர் செய்திகள்

முயற்சி தவறலாம்! ஆனால் முயற்சிக்கத் தவறாதீர்!

* விடாமுயற்சியுடன் செயல்பட்டு வாழ்வில் முன்னேறுங்கள். ஒருவேளை உங்களின் முயற்சி தவறிப் போகலாம். ஆனால் ஒருபோதும் முயற்சிக்கத் தவறாதீர்கள்.* கடவுள் என்னும் அருட்பேராற்றல் எல்லா நேரத்திலும், எல்லா இடத்திலும், எல்லாத் தொழில்களிலும் உங்களுக்கு உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும் வழி நடத்துகிறது. * நோய்க்கு சிகிச்சை செய்வதை விட, நோய் வரும் முன் காப்பதே நல்லது. இதற்கு செயலில் ஒழுங்கு முறை, உடல், உள்ளப் பயிற்சிகளை மேற்கொள்வது அவசியம்.* உணவு அளவாக இருந்தால் உடல் உணவை ஜீரணிக்கும். அதிகமாக சாப்பிட்டால் உணவு உடலை ஜீரணித்து விடும்.* புலன் கவர்ச்சியாலும், பழக்கத்தின் காரணமாகவும் மனிதன் தவறுகளைச் செய்கிறான். அந்த தவறுகளே துன்பத்திற்கு மூலகாரணமாக அமைகின்றன.* மனமே வாழ்க்கையின் விளைநிலம். மனத்தின் உயர்வே மனிதனின் உயர்வு. மனிதனின் மதிப்பு, வெற்றி எல்லாம் மனதைப் பொறுத்தே உண்டாகிறது.* மனதை அடக்க நினைத்தால் அலையும். அறிய நினைத்தால் அடங்கி விடும். இன்பமும், அமைதியும் மனதிற்குள்ளிருந்தே உண்டாகிறது.* சமையல் பாத்திரத்தை தினமும் சுத்தம் செய்வது போல மனதையும் பயிற்சியின் மூலம் உண்மையான இயல்பு நிலைக்கு கொண்டு வர வேண்டும்.* உண்மையில் எதிரி யார் என்றால் மனதில் எழும் ஒழுங்கற்ற எண்ணமே. இதனால் தவறான எண்ணங்களை கவனமாகத் தவிர்ப்பதோடு நல்ல விஷயங்களில் சிந்திப்பதும் அவசியம்.* எண்ணத்தில் உறுதியும் ஒழுங்கும் உண்டாகி விட்டால் எண்ணியதெல்லாம் உங்களின் விருப்பப்படியே எளிதில் நிறைவேறும். * ஆசையை அடியோடு ஒழிப்பது என்பது இயலாத செயல். அதற்கு அவசியமும் கிடையாது. ஆசையை சீர்படுத்தி கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம்.* கோபம் உண்டாகும் சமயத்தில் உடலிலுள்ள ஜீவகாந்த சக்தி அதிகமாக வெளியேறும். இதனால் உடலும் மனமும் கடுமையாகப் பாதிக்கப்படும்.* கோபத்தால் பிறரைத் திருத்த முடியாது. ஒருவேளை கோபத்தால் பிறரை பயமுறுத்தலாம். ஆனால் அது நீடித்த பலன் அளிப்பதில்லை.* தவறு செய்யப்பட்ட நேரத்திலேயே புத்தி சொல்லத் தேவையில்லை. அது குத்திக் காட்டுவது போலாகி விடும். * கவலையே மனதை தாக்கும் கொடிய நோய். திறமையின்மை, பயம் இரண்டும் கவலையைப் பெருக்கும் மனநிலையை உருவாக்கும். * அறிவை உணர்ச்சி வெல்வது இயல்பு. அறிவால் உணர்ச்சியை வெல்வது சிறப்பு. எனவே எப்போதும் அறிவுப்பூர்வமாக செயல்படுங்கள்.சொல்கிறார் வேதாத்திரி மகரிஷி