உன் வீரம் என்றும் சீறிப்பாயும் நம் தேசம் எங்கும் ரோஷம் ஏறும்!
UPDATED : ஜன 09, 2018 | ADDED : ஜன 09, 2018
ஜனவரி 12 விவேகானந்தர் பிறந்தநாள்* பாரத நாடே! உனது பெண்மையின் இலக்கணம் சீதை, சாவித்திரி, தமயந்தி என்பதை மறவாதே! நீ ஒரு இந்தியனாய் இருப்பதைப்பற்றி பெருமைப்படு. 'நான் ஒரு இந்தியன், ஒவ்வொரு இந்தியனும் எனது சகோதரன்' என்று வீரத்தோடு பறையறை. நம் தேசத்தின் விஷயத்தில் நீ ரோஷத்தோடு இரு.* பலமின்மையே துயரத்திற்குக் காரணம். நாம் பலவீனராக இருந்தால் கெட்டவராகிறோம். நம்மிடம் பொய்யும், திருட்டும், கொலையும், பாவச்செயல்களும் இருப்பதற்கு காரணம் நமது பலவீனமே. பலவீனம் இல்லாதவனுக்கு மரணமே இல்லை. துன்பமும் இல்லை.* இறக்கும் வரையில் பணி செய்யுங்கள். சம்பாதிக்க வேண்டும் என்ற சாதாரண உலக ஆசையில் மூழ்கிய ஒரு புழுவாக இறப்பதை விட, உண்மையை போதித்துக்கொண்டே, அதற்காக களத்திலே உயிரையும் விடும் செயல் நன்று, மிக மிக நன்று.* ஒவ்வொரு மனிதனிடமும் தெய்வீக சக்தி ஒளிந்து கிடக்கிறது. அதை வெளிக்கொண்டு வருவது தான் வாழ்க்கையின் லட்சியம். இதற்காக புறவாழ்க்கையிலும், அக வாழ்க்கையிலும் கட்டுப்பாடுடன் நடந்துகொள்வோம்.* முதலில் நாம் தெய்வங்களாவோம். பின்னர் பிறரை தெய்வங்களாக்கும் முயற்சியில் ஈடுபடுவோம். 'ஆகுக', 'ஆக்குக' என்பவையே நமது குறிக்கோள். * தெய்வத்தைப்பற்றி பேசும்போது பசியால் நலிந்து வாழும் மக்களிடையே பேசுவதால் எந்த பயனும் இல்லை, அது அவர்களை அவமதிப்பது போல் ஆகும். முதலில் அவர்களுடைய பட்டினியைப் போக்குங்கள். பிறகு தத்துவ போதனைகளையும்,சமய பிரசாரத்தையும் செய்யுங்கள். ஆன்மிகம் எழுச்சி பெறும்.* ஆயுத பலத்தால் இந்த நாடு உயரப்போவதில்லை. ஆன்மிக பலத்தால் மட்டுமே எழுச்சி அடையப்போகிறது. பரம்பொருளாகிய கடவுளிடம் கொண்ட நம்பிக்கையால் இந்திய மக்கள் பலம் பெற்றிருக்கிறார்கள். சிங்கம் போல் தைரியம் கொண்டிருக்கிறார்கள்.முழங்குகிறார் வீரத்துறவி