தலையெழுத்தை மாற்றும் எழுத்து
ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். மாணவர்கள் பலர் பாடத்தை கவனிக்காமல் வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். இதை கவனித்த ஆசிரியர், தானும் எட்டிப்பார்த்தார். அழுக்கான ஆடைகளுடன் சிறுவன் நின்று கொண்டிருந்தான்.''மாணவர்கள் படிப்பதை தொந்தரவு செய்யாதே'' என அவனிடம் கோபப்பட்டார் ஆசிரியர்.''ஐயா. நான் தப்பு ஒன்றும் செய்யவில்லை. கடைக்குப்போகும் வழியில் நீங்கள் நடத்திக்கொண்டிருந்த பாடம் என் காதில் விழுந்தது. அதனால் அப்படியே நின்றுவிட்டேன்'' என சொன்னான். ''படிப்பில் அவ்வளவு ஆசை இருந்தால் பள்ளிக்கு வரவேண்டியதுதானே'' என கேட்டார் ஆசிரியர்.''என்னை படிக்க வைப்பதற்கு என் பெற்றோருக்கு சக்தியில்லை'' என வருத்தப்பட்டான்.''சரி.. நான் என்ன நடத்திக் கொண்டிருந்தேன் என்று சொல்லு பார்க்கலாம்'' என கேட்டார்.ஆசிரியர் நடத்திய பாடத்தை, தெளிவாக கூறினான். அந்த சிறுவன். ஆச்சர்யப்பட்ட ஆசிரியர், ''தம்பி.. நாளைக்கே பள்ளிக்கு வா. கட்டணம் பற்றி கவலைப்படாதே'' என்றார். தன் தொழில் மீது எவ்வளவு மரியாதை இருந்தால் ஆசிரியர் இப்படி செய்வார் என்பதை யோசித்து பாருங்கள். கல்வி என்பது வெறும் மூன்றெழுத்துதான். ஆனால் அது தலையெழுத்தை மாற்றும் எழுத்து. இந்த ஆசிரியரை போன்று உங்களால் முடிந்த அளவு, கல்வி கற்க முடியாமல் இருக்கும் குழந்தைகளுக்கு உதவி செய்யுங்கள்.