நள்ளிரவில்...
பாபில் நகரை ஆட்சி செய்தவர் கொடுங்கோல் மன்னர் நம்ரூத். ஒருநாள் குறி சொல்லும் சிலர் மன்னரை நம்ரூத்தை சந்தித்தனர். ''ஒரு பெண்ணின் கருவில் இன்று இரவு உருவாகும் குழந்தை எதிர்காலத்தில் உங்களை அழிக்கும்'' எனக் கூறினர். உடனே அமைச்சரை அழைத்த நம்ரூத், '' பாபில் நகரிலுள்ள ஆண்களை உடனே வெளியேற்றுங்கள்'' எனக் கத்தினார். உடனடியாக ஆண்கள் வெளியேற்றப்பட்டனர். யாரும் உள்ளே நுழையாத படி அதிகாரியான ஆஜர் காவல் காத்தார். பெண்கள் யாரும் நகரை விட்டு வெளியே போகாதபடி அவரது மனைவி காவல் காத்தாள். ஆனால் விதி யாரை விட்டது? பணி செய்து கொண்டிருந்த இருவரும் நள்ளிரவில் சந்தித்துக் கொண்டனர். ''மன்னரின் கட்டளையை நிறைவேற்றுகிறாயா'' என மனைவியிடம் கேட்டார் அதிகாரி ஆஜர். ''ஜாக்கிரதையாக இருக்கிறேன். நீங்கள் சோர்ந்து போய் துாங்கி விடாதீர்கள்'' என்றாள் மனைவி. ''ஒருபோதும் துாங்க மாட்டேன்'' என சொல்லியபடி அமர்ந்தார் ஆஜர். ''நானும் கொஞ்ச நேரம் ஓய்வு எடுக்கிறேன்'' என கணவரின் அருகில் அவள் அமர்ந்தாள். இருவரும் கட்டித் தழுவிக் கொண்டனர். பின் நடந்ததை சொல்லவா வேண்டும்... இறைவன் நிர்ணயித்த சரியான நேரத்தில் ஹஜ்ரத் இப்ராஹீம் நபி கருவில் உருவானார். முட்டாள் மன்னர் நம்ரூத்தின் திட்டம் தவிடு பொடியானது.