உள்ளூர் செய்திகள்

மகிழ்ச்சி நம் கையில்...

பணக்காரர் ஒருவர் முல்லாவிடம், ''என் மனம் இறுக்கமாக உள்ளது. எப்படி சரி செய்வது'' எனக் கேட்டார்.''நாளை காலை உங்கள் வீட்டுக்கு வருவேன். உங்களிடம் உள்ள பணத்தை மூடையாக வைத்திருங்கள்' என்றார். ''அப்படி செய்தால்... இறுக்கம் போகுமா'' எனக் கேட்டார் பணக்காரர். ''நான் சொல்வதை செய்தால் இறுக்கம் போகும்'' என்றார் முல்லா. அப்படியே செய்தார் அவர். முல்லாவும் வந்தார். மூடையை துாக்கிக் கொண்டு ஓடினார். ''என் பணம்... என் பணம்'' என கத்தியபடி பணக்காரர் ஓடினார். அவருக்கு மூச்சு வாங்கவே ஓரிடத்தில் அமர்ந்தார். சிறிது நேரத்தில் அங்கே வந்த முல்லா, மூடையை கொடுத்தார். அதை பார்த்ததும் பணக்காரருக்கு சிரிப்பு வந்தது. ஆனாலும் சிரிப்பை அடக்கிக் கொண்டு கோபமாக, ''பணத்தை திருடிக் கொண்டு ஓடினாயே'' எனக் கத்தினார். ''கோபப்படாதீர்கள். இப்போது சந்தோஷம் தானே...'' எனக் கேட்டார் முல்லா. '' உலகமே என் கையில் உள்ளது போல உணர்கிறேன்'' ''பார்த்தீர்களா... இழக்கும் போது துடித்த மனம் கிடைத்தவுடன் மகிழ்ச்சி அடைகிறது. இது தான் வாழ்க்கை. என்னை மன்னியுங்கள்'' என்றார். மகிழ்ச்சி என்பது நம் கையில் என்பதை பணக்காரர் புரிந்து கொண்டார்.