உழைத்து வாழ வேண்டும்
ஞானி ஒருவர் தங்களது ஊருக்கு வருகிறார் என்பதை அறிந்தனர் அந்த ஊர் மக்கள். அவர்களில் ஒருவர் ஞானியிடம் 'இன்று தங்களுக்கான மதிய உணவை நான்தான் எடுத்து வருவேன்' எனக்கூறினார். அவரும் சம்மதித்தார். அறுசுவை உணவு தயாரானதும் அதை எடுத்து வந்தார். அதேநேரம் மற்றொருவர் இரண்டு ரொட்டிகளை ஞானியிடம் கொடுத்து சாப்பிட சொன்னார். ஒருபுறம் அறுசுவை உணவு. இன்னொரு புறம் காய்ந்த ரொட்டி. அவரோ ரொட்டியை எடுத்தார். அனைவரும் அவரது முகத்தையே பார்த்தனர். புன்னகைத்த ஞானி உணவை கையில் எடுத்து பிழிந்தார். அதில் இருந்து ரத்தம் வழிந்தது. பின் ரொட்டியை பிழிந்தார். பால் வழிந்தது. எல்லோருக்கும் ஒரே ஆச்சர்யம். அவரே அதற்கான காரணத்தை கூற ஆரம்பித்தார். 'பிறரை ஏமாற்றியும் உழைப்பை உறிஞ்சியும் சம்பாதித்த பணத்தில் வந்தது அறுசுவை உணவு. உழைத்த பணத்தில் வந்தது ரொட்டி. உழைத்து வாழ்வதுதான் சிறந்தது' என்றார்.