உழைக்கும் கைகளே.. உருவாக்கும் கைகளே!
உழைப்பாளி ஒருவர் வணக்கம் தெரிவித்ததற்கு, நாயகம் அவரது கைகளை கண்களில் ஒற்றிக் கொண்டார். இதைப்பார்த்த தோழர்கள், ''இவருக்கு ஏன் இப்படி நன்றி தெரிவிக்கிறீர்கள்'' என்று கேட்டனர். ''உழைப்பினால் இவரது கைகள் காய்த்து போய் விட்டன. உழைப்பின் சின்னமான அவரது கைகளுக்கு மதிப்பளிப்பது நமது கடமை'' என விளக்கம் அளித்தார். என்னடா... இது உழைப்பிற்கு இவ்வளவு முக்கியத்துவமா என்று யோசிக்கிறீர்களா... அதிகம் யோசிக்காதீர்கள். வாழ்க்கைப் பயணத்தில் நாம் சாதனை சிகரத்தை அடையவேண்டுமானால் அதற்கு உழைப்பு தேவை. நாம் எவ்வளவுக்கெவ்வளவு உழைக்கின்றோமோ அந்த அளவிற்கு முன்னேற்றம் இருக்கும். சிலர் வாழ்வில் முன்னேற வேண்டும் என பேச்சளவில் மட்டும் கூறிக்கொண்டு இருப்பார்களே, தவிர செயல்பாடு ஒன்றும் இருக்காது. அதற்குக் காரணம் அவர்கள் உழைக்க தயாராக இல்லை. இவர்களுக்கு தோல்வி மட்டுமே மிஞ்சும். வெற்றி பெறுவதற்கு ஒரே வழி உழைப்புதான். ஒரு முயற்சியில் ஈடுபட்டால் அதற்கு உங்களது முழு உழைப்பையும் கொடுங்கள். அதற்கான பலன் உடனே கிடைக்காவிட்டாலும், நிச்சயம் ஒருநாள் கிடைக்கும்.