உள்ளூர் செய்திகள்

அக்கம் பக்கம்

ஆட்சி போனதால், தூக்கமும் போச்சு...!

மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, ஆட்சியில் இருக்கும்போது, மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுவார். 'இந்த வயதிலும், இவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறாரே' என, எதிர்க்கட்சியினர் கூட, அவரைப் பார்த்து ஆச்சர்யப்பட்டது உண்டு.புத்ததேவின் சுறுசுறுப்பின் ரகசியம் இதுதான்... முதல்வராக இருக்கும்போது, காலையிலேயே தலைமைச் செயலகத்துக்கு வந்து, பணிகளைத் துவக்கி விடுவார். மதியம், 1.30 மணிக்கு, அவரது அலுவலகம் வெறிச்சோடிவிடும். மதிய உணவுக்காக செல்லும் அவர், உணவை முடித்ததும், குட்டித் தூக்கம் போடுவார்.

இதன்பின், மாலை, 4 மணிக்கு தான், மீண்டும் அலுவலகத்துக்கு வருவார்.'என் சுறுசுறுப்பின் ரகசியம், பகலில் கிடைக்கும் குட்டித் தூக்கம் தான்' என, அவரே மனம் திறந்து கூறியது உண்டு. மதியம், 1.30 முதல், மாலை, 4 மணி வரை, எந்த ஒரு கூட்டத்திலும் பங்கேற்க மாட்டார். எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கூட்டமாக இருந்தாலும், 'மாலை 4 மணிக்கு மேல் பார்ப்போம்' என, கூறி விடுவார். இந்த நடைமுறைகளை, ஆட்சியில் இருக்கும் வரை கட்டாயமாக பின்பற்றினார்.

தற்போது ஆட்சி பறிபோனதும், இவரது நடைமுறைகளும் மாறி விட்டன. சமீபத்தில், கோல்கட்டாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற புத்ததேவ், மாலை, 4 மணி வரை அதில் கலந்து கொண்டார். இதைப் பார்த்து, மார்க்சிஸ்ட் கட்சியினரே ஆச்சர்யப்பட்டனர்.'பார்த்தீர்களா... ஆட்சி பறிபோனதால், நம்ம தோழரின் தூக்கமும் பறிபோய் விட்டது' என கிண்டலடிக்கவும், காம்ரேட்டுகள் தயங்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை