| ADDED : ஜூன் 07, 2024 09:39 PM
'பாவம்; எவ்வளவோ ஆசைப்பட்டார்; ஆனால், எதுவுமே நடக்காமல் போய் விட்டது...' என, ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் பற்றி பரிதாபப்படுகின்றனர், அவரது ஆதரவாளர்கள்.பீஹாரில் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு பிரதான எதிர்க்கட்சியாக, லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளது. லாலு பிரசாத் யாதவின் மகன் தான் தேஜஸ்வி யாதவ். லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, தேஜஸ்வி யாதவின் கூட்டங்களுக்கு பெரிய அளவில் மக்கள் திரண்டனர். பிரசாரத்தின் போது நிகழ்ந்த விபத்தால், அவரது காலில் காயம்ஏற்பட்டது.சக்கர நாற்காலியில் அமர்ந்து பிரசாரம் செய்தார், தேஜஸ்வி யாதவ். 'ஆளுங்கட்சிக்கு எதிரான அதிருப்தி, கால் உடைந்ததால் ஏற்பட்ட அனுதாப அலை ஆகியவற்றால், நமக்கு மிகப் பெரிய வெற்றி கிடைக்கும். டில்லி அரசியலில் செல்வாக்கான பதவியை பெற்று விடலாம்...' என கனவு கண்டார், தேஜஸ்வி யாதவ்.ஆனால், அவரது கட்சி நான்கு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. பீஹாரில் மொத்தம் உள்ள, 40 தொகுதிகளில், 30 தொகுதிகளை பா.ஜ., - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அள்ளியது.'இண்டியா' கூட்டணி ஆட்சி அமைக்க முடியாமல் போனதற்கு, பீஹாரில் ஏற்பட்ட தோல்வியும் முக்கிய காரணமாக கூறப்படுகிது. இதனால் கவலையில் ஆழ்ந்துள்ள தேஜஸ்வி யாதவ், 'நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்...' என, சோகத்துடன் வலம் வருகிறார்.