உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / எதிர்கால சவால் இவர் தான்!

எதிர்கால சவால் இவர் தான்!

'இனி உங்களுக்கு எப்போதுமே ஏறுமுகம்தான்...' என, ஆந்திரா துணை முதல்வரும், பிரபல நடிகருமான பவன் கல்யாணைப் பற்றி பெருமையுடன் பேசுகின்றனர், அவரது ஆதரவாளர்கள். இங்கு, முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றாலும், பவன் கல்யாணின் ஜனசேனா, பா.ஜ., ஆகிய கூட்டணி கட்சிகளுக்கும், தன் அமைச்சரவையில் வாய்ப்பு அளித்துள்ளார்,சந்திரபாபு நாயுடு.அதிலும், பவன் கல்யாணுக்கு துணை முதல்வர் பதவியையே கொடுத்துள்ளார். இவர், பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் இளைய சகோதரர். சிரஞ்சீவி ஏற்கனவே, 'பிரஜா ராஜ்யம்' என்ற பெயரில் கட்சி துவங்கினார். தேர்தலில் வெற்றி கிடைக்காததால், கட்சியை கலைத்து விட்டு, மீண்டும் சினிமாவுக்கு வந்து விட்டார். தன் அண்ணனைப் போல், பவன் கல்யாணும், ஜன சேனா என்ற கட்சியை துவக்கினார். துவக்கத்தில் தோல்வியை சந்தித்தாலும், தன் அண்ணனைப் போல் அவசரப்படாமல், பொறுமையாக காய் நகர்த்தினார்; இதற்கு தற்போது பலன் கிடைத்துஉள்ளது. சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட, 21 தொகுதிகளிலும் ஜன சேனா வெற்றி பெற்றுள்ளதுடன், பவன் கல்யாணுக்கு துணை முதல்வர் பதவியும் கிடைத்து விட்டது. 'ஆந்திர அரசியலில் இப்போது சந்திரபாபுவுடன் கூட்டணியில் இருந்தாலும், எதிர்காலத்தில் அவருக்கு மிகப் பெரிய சவாலாக பவன் கல்யாண் விளங்குவார்...' என்கின்றனர், இங்குள்ள அரசியல்வாதிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ