| ADDED : மே 02, 2024 09:44 PM
'புதிதாக சிந்திக்கிறார். மக்கள் கூட்டம் கூடுகிறது. அடுத்த தேர்தலிலும் நாங்கள் தான் ஆளுங்கட்சி...' என, உற்சாகத்துடன் பேசுகின்றனர், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி நிர்வாகிகள். இங்கு முதல்வர் சம்பாய் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஏற்கனவே முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன், பண மோசடி வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அந்த கட்சியின் மூத்த தலைவரான சம்பாய் சோரன் முதல்வராக்கப்பட்டார். லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், ஹேஹமந்த் சோரன் கைது செய்யப்பட்டதால், கட்சிக்கு பிரசாரம் செய்ய ஆள் இல்லையே என்ற கவலையில் இருந்தனர், அந்த கட்சியினர். ஆனால், சோரனின் மனைவி கல்பனா திடீரென அரசியல் களத்தில் குதித்து, ஜார்க்கண்ட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். கல்பனா அரசியலுக்கு வருவதில், அவரது கணவருக்கு விருப்பம் இல்லை. ஆனால் கல்பனாவோ, தன் மாமனார், மாமியாரிடம் ஆசி பெற்ற கையுடன், சட்டசபை இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்து விட்டார்.அவரது பிரசாரத்துக்கும் பெரும் கூட்டம் கூடுகிறது. நாடு முழுதும் உள்ள எதிர்க்கட்சி கூட்டணி தலைவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி, அவர்களுடன் அரசியல் தொடர்பாக பேசி வருகிறார். 'கல்பனாவின் வேகத்தை பார்த்தால், ஜார்க்கண்டின் அடுத்த முதல்வர் அவர் தான் என்பது உறுதியாகி விட்டது...' என்கின்றனர், அவரது கட்சியினர்.