உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / கண்களை குத்த முயற்சி!

கண்களை குத்த முயற்சி!

'பட்ட காலிலேயே படும் என்பது சரியாகத் தான் இருக்கிறது...' என கண்ணீர் வடிக்கிறார், தெலுங்கானா முன்னாள் முதல்வரும், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ். இங்கு, முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. கடந்த சட்டசபை தேர்தலில் ஆட்சியை பறிகொடுத்ததில் இருந்து, சந்திரசேகர ராவுக்கு தொடர்ந்து அடிமேல் அடி விழுகிறது. சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தல் என, அவரது கட்சி வரிசையாக தோல்விகளை சந்தித்து வருகிறது. இதையடுத்து, ஆளுங்கட்சியான காங்கிரஸ், பாரத் ராஷ்ட்ர சமிதியின் எம்.எல்.ஏ.,க்களை கொத்து கொத்தாக துாக்கி வருகிறது. அந்த கட்சிக்கு மொத்தம் இருந்த, 38 எம்.எல்.ஏ.,க்களில், இதுவரை 10 பேர் காங்கிரசுக்கு ஓட்டம் பிடித்து விட்டனர். மீதமுள்ளவர்களையும் துாக்குவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. சந்திரசேகர ராவுக்கு ஜோதிடம், வாஸ்து, எண் கணித ஜோதிடம் ஆகியவற்றில் நம்பிக்கை அதிகம். அவருக்கு ராசியான எண், 6. ஆனால், இப்போது அந்த ராசியான எண்ணை வைத்தே, அவரை மடக்க ஆளுங்கட்சி திட்டமிட்டு வருகிறது. சமீபத்தில், பாரத் ராஷ்ட்ர சமிதியின் ஆறு எம்.எல்.ஏ.,க்களை, காங்., கட்சியினர் இழுத்தனர்.இதேபோல், ஒவ்வொரு மாதமும் ஆறு ஆறு எம்.எல்.ஏ.,க்களாக வளைக்க முடிவு செய்துள்ளனர். இதைக் கேள்விப்பட்ட சந்திரசேகர ராவ், 'எண் கணித ஜோதிடத்தை வைத்தே, என் கண்களை குத்துகின்றனரே...' என, புலம்புகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ