உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / அதிரும் தேர்தல் களம்!

அதிரும் தேர்தல் களம்!

'இவர், இவ்வளவு கோபப்பட்டு இதற்கு முன் பார்த்ததே இல்லை...' என ஒடிசா முதல்வரும், பிஜு ஜனதா தளம் கட்சி தலைவருமான நவீன் பட்நாயக்கை பற்றி ஆச்சரியத்துடன் பேசுகின்றனர், அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள்.ஒடிசாவில் தற்போது, லோக்சபா தேர்தலுடன் சேர்த்து, சட்டசபை தேர்தலும் நடக்கிறது. கடந்த 24 ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஒடிசாவின் முதல்வராக பதவி வகித்து வருகிறார், நவீன் பட்நாயக். பா.ஜ., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தும், பட்நாயக்கை முதல்வர் நாற்காலியில் இருந்து அசைக்க முடியவில்லை. ஆர்ப்பாட்டம், ஆரவாரம், ஆவேசம் என எதுவுமே இல்லாமல், மிக எளிதாக தேர்தலில் வெற்றி வாகை சூடி ஆச்சரியப்படுத்துவார், நவீன் பட்நாயக். ஆனால், தற்போதைய தேர்தல் அவருக்கு அப்படி அமையாது போலிருக்கிறது. தேர்தல் பிரசாரம் துவங்கியதில் இருந்தே, பா.ஜ., தலைவர்கள் நவீன் பட்நாயக்கை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், ஒடிசா வளர்ச்சி திட்ட தலைவருமான வி.கே.பாண்டியனை பா.ஜ., தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். நவீன் பட்நாயக், பாண்டியன் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், ஒடிசாவின் அடுத்த முதல்வர் அவர் தான் என்றும் கூறி வருகின்றனர். இது, பட்நாயக்கிற்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. 'பா.ஜ., தலைவர்கள் தேர்தல் நேரத்தில் மட்டுமே ஒடிசாவுக்கு வருகின்றனர். சீசன் நேரத்தில் வரும் சுற்றுலா பயணியருக்கும், அவர்களுக்கும் வித்தியாசம் இல்லை...' என, காட்டமாக பேசினார். இதைக் கேட்ட பிஜு ஜனதா தளம் நிர்வாகிகள், 'ஆவேசமாக பேசத் தெரியாத நவீன் பட்நாயக்கையே, கோபப்பட வைத்து விட்டனர். தேர்தல் களம் இனி அதிரும்...' என்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி