'இது தான் இவருக்கு கடைசி வாய்ப்பு; இதை தவற விட்டால், இனி எப்போதும் நடக்காது...' என பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவருமான நிதீஷ் குமாருக்கு கெடு விதிக்கின்றனர், இங்குள்ள அரசியல்வாதிகள்.இங்கு நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. பா.ஜ.,வை விட, ஐக்கிய ஜனதா தளத்துக்கு குறைவான எம்.எல்.ஏ.,க்கள் இருந்தாலும், அவரது அரசியல் அனுபவத்துக்கு மதிப்பு கொடுத்து, முதல்வர் நாற்காலியை அவருக்கு தந்துள்ளனர், பா.ஜ., தலைவர்கள். ஆனால், அடுத்த சட்டசபை தேர்தலில் இதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்கின்றனர், எதிர்க் கட்சியினர். தற்போதைய லோக்சபா தேர்தலில் பீஹாரில் மொத்தம் உள்ள, 40 தொகுதிகளில் பா.ஜ., 17; ஐக்கிய ஜனதா தளம் 16 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. மற்ற தொகுதிகள், இதர கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.'இந்த தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், குறைந்தது 10க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே நிதீஷ் குமாரால் அரசியலில் நீடிக்க முடியும்...' என்பது, இங்குள்ள மூத்த அரசியல்வாதிகளின் கணிப்பாக உள்ளது. 'அடிக்கடி கூட்டணி மாறுவதால், நிதீஷின் செல்வாக்கு குறைந்து விட்டது. இந்த தேர்தலில் வாய்ப்பை தவற விட்டால், பா.ஜ., மொத்தமாக அவரை அரசியலில் இருந்து ஓரம் கட்டி விடும். நிதீஷ் குமார் கரை சேருவாரா அல்லது காணாமல் போவாரா என்பது, ஓட்டு எண்ணிக்கையின் போது தெரிந்து விடும்...' என்கின்றனர், சக அரசியல்வாதிகள்.