உள்ளூர் செய்திகள்

பாவம் போகுமா?

'ஏற்கனவே செய்த துரோகத்துக்கு இப்போது தண்டனை அனுபவிக்கிறார்...' என, மஹாராஷ்டிரா துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித் பவாரை கிண்டல் அடிக்கின்றனர், சரத் பவாரின் விசுவாசிகள். தேசியவாத காங்கிரஸ் கட்சியை நிறுவிய சரத் பவாரின் சகோதரர் மகன் தான், இந்த அஜித் பவார். இவரை அரசியலில் பெரிய தலைவராக வளர்த்து விட்டவரும், சரத் பவாரே. ஆனாலும், அவருக்கு துரோகம் செய்து, எதிர் அணியினருடன் கைகோர்ப்பதை வழக்கமாக வைத்துள்ளார், அஜித் பவார். இப்போதும் அப்படித் தான், தேசியவாத காங்கிரசின் கணிசமான எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், நிர்வாகிகளுடன், பா.ஜ., கூட்டணியில் இணைந்து, துணை முதல்வர் பதவியில் அமர்ந்துள்ளார்.சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் சரத் பவார் அணி, கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால், அஜித் பவார் அணி படுதோல்வி அடைந்தது. இதனால், அவரது கட்சிக்கு மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்கவில்லை. இதையடுத்து, மனம் புழுங்கி தவிக்கும் அஜித் பவார், பிரபல ஜோதிடரிடம் ஆலோசனை கேட்டுள்ளார். அவரோ, 'நீங்கள் வெளியில் எங்கு சென்றாலும், இளம் சிவப்பு நிறத்தில் கோட் அணிந்து செல்லுங்கள். எல்லாம் நல்லதே நடக்கும்...' என, கூறியுள்ளார். இதையடுத்து, இரண்டு டஜன் இளம் சிவப்பு நிற கோட்டுகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளார், அஜித் பவார். இங்குள்ள அரசியல்வாதிகளோ, 'இளம் சிவப்பு நிற கோட் அணிந்து, பாவத்தை போக்க நினைக்கிறார் போலிருக்கிறது...' என, கிண்டல் அடிக்கின்றனர். ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை