| ADDED : பிப் 06, 2024 09:35 PM
'பரவாயில்லையே; பதவிக்காக கோஷ்டி மோதலில் ஈடுபடாமல் ஆரோக்கியமான அரசியல் செய்கிறாரே...' என முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான ரேணுகா சிங்கை பாராட்டுகின்றனர், சக அரசியல்வாதிகள். இவர், சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர்.இங்கு முதல்வர் விஷ்ணு தியோ சாய் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது.ரேணுகா சிங், கடந்த சில மாதங்களுக்கு முன் வரை, பிரதமர் மோடி தலைமையிலான அரசில், மத்திய பழங்குடியினர் நல விவகார இணை அமைச்சராக பதவி வகித்தார். சத்தீஸ்கருக்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதும், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, தேர்தலில் போட்டியிடும்படி கட்சி மேலிடம், அவருக்கு உத்தரவிட்டது. இதனால், பா.ஜ., வெற்றி பெற்றால் ரேணுகாவுக்கு முதல்வர் பதவி தரப்படும் என பேசப்பட்டது. அப்படி எதுவும் நடக்கவில்லை. ரேணுகாவுக்கு அமைச்சர் பதவி கூட கிடைக்கவில்லை. இதனால் அவர், உள்ளடி அரசியலில் ஈடுபடலாம் என பேச்சு எழுந்தது. ஆனால் அவரோ, தன் தொகுதியில், பிளஸ் 2 வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த பழங்குடியின மாணவியரை அழைத்து கவுரவித்து வருகிறார். ஒரு நாள் எம்.எல்.ஏ., பதவியை அவர்களுக்கு அளித்து, முக்கியமான நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக அவர்களை பங்கேற்க வைத்து அசத்துகிறார். 'பதவிக்காக சண்டை போடும் அரசியல்வாதிகள் இருக்கும் இந்த காலத்தில் ரேணுகா சிங் வித்தியாசமானவராக திகழ்கிறார்...' என பாராட்டுகின்றனர், சத்தீஸ்கர் மக்கள்.