உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / ஓட்டு வங்கிக்கு வேட்டு?

ஓட்டு வங்கிக்கு வேட்டு?

'இளைஞராக இருந்தாலும், சரியான நேரம் பார்த்து காய் நகர்த்துகிறார்...' என, மத்திய அமைச்சரும், பீஹாரில் உள்ள லோக் ஜனசக்தி கட்சி தலைவருமான சிராக் பஸ்வான் பற்றி, அந்த கட்சியின் நிர்வாகிகள் பெருமையுடன் பேசுகின்றனர். பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., அடங்கிய தே.ஜ., கூட்டணியில், லோக் ஜனசக்தி கட்சியும் அங்கம் வகிக்கிறது. அந்த கட்சியின் தலைவர் சிராக் பஸ்வான், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில், உணவு பதப் படுத்துதல் துறை அமைச்சராக உள்ளார். இவர், முன்னாள் மத்திய அமைச்சரான, மறைந்த ராம்விலாஸ் பஸ்வானின் மகன். சமீபத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் சிராக் பேசியது, பீஹார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 'கடந்த, 2005ம் ஆண்டு பீஹாரில் சட்டசபை தேர்தல் நடந்தது. அப்போது, முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவரை முதல்வராக்கும்படி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவிடம், என் தந்தை வலியுறுத்தினார். ஆனால், லாலு அதை ஏற்க மறுத்து விட்டார்...' என, சிராக் பேசினார். அவரது இந்த பேச்சு, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. 'நம் கட்சியின் ஓட்டு வங்கியே முஸ்லிம் சமூகம் தான். சிராக்கின் பேச்சால், அந்த ஓட்டு வங்கி பறிபோய் விடுமோ...' என, அக்கட்சியினர் புலம்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி