'ராணுவ வீரர்கள் மீது அளவுக்கு அதிகமான பாசமும், கரிசனமும் வைத்திருக்கிறாரே...' என, மத்திய இணை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான ராஜிவ் சந்திரசேகர் குறித்து ஆச்சரியப்படுகின்றனர், சக அமைச்சர்கள். இவர், கேரளாவை பூர்விகமாக கொண்டவர். இவரது தந்தை, இந்திய விமானப் படையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ராஜிவ் சந்திரசேகர் தற்போது மத்திய மின்னணுவியல், தகவல் தொழில்நுட்ப துறை இணை அமைச்சராக உள்ளார்.தந்தை, ராணுவத்தில்பணியாற்றியவர் என்பதால், இவருக்கும் ராணுவ வீரர்கள் மீது அலாதி பிரியம் உண்டு. இந்திய விமானப் படையில் நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு கைவிடப்பட்ட, 'டகோடா' வகை சிறிய விமானம் ஒன்றை விலைக்கு வாங்கி, அதை சீரமைத்து, தன் தந்தை நினைவாக, அதை மீண்டும் விமானப் படைக்கே பரிசளித்தார், ராஜிவ் சந்திரசேகர்.சமீபத்தில், 'பீல்டு மார்ஷல்' மானெக் ஷாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட, சாம் பகதுார் என்ற ஹிந்தி படம் வெளியானது. பாகிஸ்தானுடன் போர் நடத்தி, அதில் வெற்றி பெற்று, வங்கதேசம் என்ற தனி நாடு உருவாக முக்கிய காரணமாக இருந்தவர் தான், மானெக் ஷா.சமீபத்தில் டில்லியில் ராணுவ வீரர்களை அழைத்து, அவர்களுக்காக இந்த படத்தின் சிறப்பு காட்சியை திரையிட்டு காட்டினார், சந்திரசேகர். 'ராணுவத்தில் சேர்ந்திருக்க வேண்டியவர், பாதை மாறி அரசியலுக்கு வந்து விட்டார் போலும்...' என நகைச்சுவையாக பேசுகின்றனர், சக அமைச்சர்கள்.