'இது என்ன புது முதல்வருக்கு வந்த சோதனை...' என, மத்திய பிரதேச மாநில முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, மோகன் யாதவைப் பற்றி நகைச்சுவையாக பேசுகின்றனர், சக அரசியல்வாதிகள்.இங்கு சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., அபார வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்தது. ஏற்கனவே இங்கு, 18 ஆண்டுகளுக்கு மேல் முதல்வராக பதவி வகித்த சிவ்ராஜ் சிங் சவுகான், தனக்கு மீண்டும் பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருந்தார்.ஆனால், புதுமுகமான மோகன் யாதவுக்கு அதிர்ஷ்டம் அடித்தது. கட்சியில் பல மூத்த தலைவர்கள் இருக்கும்போது, மோகன் யாதவுக்கு முதல்வர் பதவியை மேலிடம் கொடுத்தது, பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சவாலை எப்படி எதிர்கொள்வது என தீவிரமாக யோசித்து வரும் மோகன் யாதவுக்கு, சமீபத்தில் ஒரு தர்மசங்கடமான நிலை ஏற்பட்டது...கடந்த சில நாட்களாகவே, முதல்வர் அலுவலகத்துக்கு தொடர்ச்சியாக ஒருவர் தொலைபேசியில் பேசி வருகிறார். அவர், 'பா.ஜ., மூத்த எம்.எல்.ஏ.,வான பூபேந்திர சிங்கிற்கு எப்படியாவது அமைச்சரவையில் இடம் கொடுங்கள்...' என, நச்சரித்து வருகிறார். இவரது தொல்லை தாங்காமல், முதல்வர் அலுவலக ஊழியர்கள், இந்த விவகாரத்தை மோகன் யாதவின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். அவரோ, 'முதல்வர் பதவியில் அமர்ந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை; அதற்குள் நெருக்கடி துவங்கி விட்டது. அமைச்சர் பதவியை பெற விரும்புவோர், எப்படியெல்லாம் எனக்கு தொல்லை தருகின்றனர் பார்த்தீர்களா...' என, புலம்பி தீர்த்துள்ளார்.