உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / வாடகை வீடு கிடைக்குமா?

வாடகை வீடு கிடைக்குமா?

வாடகை வீடு கிடைக்குமா?

'பார்லிமென்டில் வீராவேசமாக பேசியவருக்கா இந்த நிலை...' என, திரிணமுல் காங்கிரசைச் சேர்ந்த மஹுவா மொய்த்ராவை பார்த்து பரிதாபப்படுகின்றனர், அவரது கட்சியினர்.மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜிக்கு மிகவும் நெருக்கமானவர் மொய்த்ரா.கடந்த லோக்சபா தேர்தலில், திரிணமுல் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், பார்லிமென்டில் மத்திய அரசை மிக கடுமையாக விமர்சிப்பவர். இதனால், சக எதிர்க்கட்சியினரே இவரை பொறாமையாக பார்த்த நாட்கள் உண்டு. இந்த விஷயம் தான், அவரது அரசியல் வாழ்வுக்கு இப்போது ஆணி அடித்து விட்டது. பார்லிமென்டில் அரசை விமர்சித்து பேசியதற்கு, தொழில் அதிபரிடம் லஞ்சம் பெற்றதாக கூறப்பட்ட புகாரில், எம்.பி., பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார், மஹுவா மொய்த்ரா.இதனால், டில்லியில் அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த அரசு பங்களாவும் பறிக்கப்பட்டு விட்டது. 'எம்.பி., பதவி பறிக்கப்பட்டதை எதிர்த்து, சட்டப் போராட்டம் நடத்தப் போகிறேன். அதுவரை நான் டில்லியில் தங்கியிருக்க வேண்டும். அதனால், மீண்டும் அரசு பங்களாவை எனக்கு ஒதுக்க உத்தரவிட வேண்டும்...' என, நீதிமன்றத்தில் முறையிட்டார்.நீதிமன்றமோ, 'இந்த விஷயத்தில் தலையிட முடியாது...' என, கைவிரித்து விட்டது. இதனால், 'டில்லியில் தங்குவதற்கு ஒரு நல்ல வீடு, குறைந்த வாடகைக்கு கிடைக்குமா...' என, தனக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்து வருகிறார், மஹுவா மொய்த்ரா.

பங்காளி சண்டை ஆரம்பம்!

'இது புதுவிதமான அரசியலாக இருக்கிறதே...' என, சமீபத்தில் காங்கிரசில் இணைந்த ஒய்.எஸ்.ஆர். ஷர்மிளாவைப் பற்றி ஆச்சரியத்துடன் பேசுகின்றனர், தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநில அரசியல்வாதிகள்.ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்தவர், ராஜசேகர ரெட்டி. காங்கிரசைச் சேர்ந்த இவர், ஹெலிகாப்டர் விபத்தில் பலியானதை அடுத்து, அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டி அரசியலில் குதித்தார்.காங்கிரஸ் மேலிடத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அதிலிருந்து விலகிய ஜெகன்மோகன், தன் தந்தை பெயரில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் என்ற கட்சியை துவக்கி, தற்போது ஆந்திர மாநிலத்தின் முதல்வராக உள்ளார். இவரது சகோதரி ஷர்மிளாவும் அரசியலுக்கு வர ஆசைப்பட்டார். அதற்கு ஜெகன்மோகன் அனுமதிக்கவில்லை. இதனால், தெலுங்கானா மாநிலத்துக்கு தாவிய ஷர்மிளா, ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா என்ற கட்சியை நடத்தி வந்தார்.தற்போது, இந்த கட்சியை காங்கிரசுடன் இணைத்துள்ள ஷர்மிளாவை வைத்து, மிகப் பெரிய அரசியல் நாடகத்தை அரங்கேற்ற காங்., மேலிடம் திட்டமிட்டுள்ளது. ஷர்மிளாவை, ஆந்திர மாநில அரசியலில் முழு வீச்சில் களம் இறக்கி, அவரது சகோதரர் ஜெகன்மோகனுக்கு எதிராக மோத விட காங்., தயாராக உள்ளதாக தகவல்கள் கசிகின்றன. இதற்கு ஷர்மிளாவும் பச்சைக்கொடி காட்டி விட்டதால், 'அண்ணனுக்கும், தங்கைக்கும் இடையே பங்காளி சண்டைக்கு இனி பஞ்சமிருக்காது...' என்கின்றனர், ஆந்திர மாநில அரசியல்வாதிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை