| ADDED : பிப் 25, 2024 11:38 PM
'தேர்தல் நெருங்கும் நேரத்தில் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி விடுவார் போலிருக்கிறதே...' என, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் பற்றி கவலையுடன் பேசுகின்றனர், மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் ஆதரவாளர்கள்.நிதின் கட்கரி, பா.ஜ., தேசிய தலைவராக பதவி வகித்தவர். எதிர் முகாமிலும் இவருக்கு நண்பர்கள் உண்டு; அனைத்து தரப்பினருடனும் எளிதாக பழகக் கூடியவர்.தற்போது, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக உள்ளார். தன் துறைக்கு உட்பட்ட பணிகளை சிறப்பாக செய்வதாக பலரும் இவரை பாராட்டிய நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும், 'நிதின் கட்கரி, தன் பணிகளை நன்றாக செய்கிறார். பாரபட்சம் இன்றி திட்டங்களை செயல்படுத்துகிறார்...' என, பாராட்டு பத்திரம் வாசித்தனர். இந்நிலையில் தான், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனும், சமீபத்தில் நிதின் கட்கரியை வெகுவாக பாராட்டினார். 'இவரைப் போன்ற ஒரு திறமையான அமைச்சரை நான் பார்த்ததே இல்லை. தனக்கு கீழ் உள்ள அதிகாரிகளிடம் எப்படி வேலை வாங்க வேண்டும் என்பதை நன்றாக தெரிந்து வைத்துள்ளார். கட்கரியை போன்ற அமைச்சர்கள் தான் நமக்கு தேவை...' என, சரளமாக பாராட்டி தள்ளினார், ரகுராம் ராஜன். இதில் என்ன வேடிக்கை என்றால், 'மத்திய அரசையும், அதன் பொருளாதார நடவடிக்கைகளையும் கடுமையாக விமர்சித்து வரும், ரகுராம் ராஜன் பாராட்டு, கட்கரியை தர்மசங்கடத்தில் நெளிய வைத்து உள்ளது...' என்கின்றனர், அவரது ஆதரவாளர்கள்.