| ADDED : செப் 08, 2026 11:07 PM
'இனி, கட்சிக்காரர்களிடம் ரொம்பவே உஷாராக இருக்க வேண்டும்...' என புலம்புகிறார், கர்நாடக மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சரான அஜய் தரம் சிங். கர்நாடகாவில், முதல்வர் சிவகுமார் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. சமீபத்தில், இங்கு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில், இம்மாநில முன்னாள் முதல்வர் தரம் சிங்கின் மகன் அஜய் தரம் சிங்கிற்கு, அமைச்சர் பதவி தரப்பட்டது. அமைச்சர் கனவு நிறைவேறிய உற்சாகத்தில், சமீபத்தில் சொந்த ஊரான கலபுரகிக்கு திரும்பினார் அஜய். அவரது ஆதரவாளர்கள், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் அவரை வரவேற்றனர்; சிலர், அமைச்சரை தோளில் துாக்கி வைத்து, மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். தொண்டர்கள் கூட்டம் அவரை சூழ்ந்தது. அப்போது, கூட்டத்தில் இருந்த ஒருவர், அஜய் அணிந்திருந்த தங்க மோதிரத்தை நைசாக கழற்ற முயன்றார். சுதாரித்த அஜய், 'என் மோதிரத்தை யாரோ திருடுகின்றனர்...' என அலறினார். இதையடுத்து, மோதிரத்தை திருட முயன்றவர், அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். மோதிரம் தப்பியதால் நிம்மதி அடைந்த அஜய், ஆதரவாளர்களை நோக்கி, 'உங்களின் கொண்டாட்டம் எல்லாம் போதும்; கலைந்து செல்லுங்கள்; ஆளை விடுங்க சாமி...' என, முணுமுணுத்தபடியே அங்கிருந்து வேகமாக புறப்பட்டு சென்றார்.