'எந்த முடிவும் எடுக்காமல் இழுத்தடித்தால், இந்த தேர்தலிலும் மண்ணை கவ்வ வேண்டியது தான்...' என ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவை பற்றி, கவலையுடன் கூறுகின்றனர், அவரது கட்சி நிர்வாகிகள்.இங்கு, முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அடுத்த சில மாதங்களில் லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளதை அடுத்து, பெரும்பாலான அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன.காங்கிரஸ், தி.மு.க., திரிணமுல், ஆம் ஆத்மி உள்ளிட்ட, 28 எதிர்க்கட்சிகள் இணைந்து, 'இண்டியா' என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன.மேலும் சில கட்சிகள், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. சந்திரபாபு நாயுடு மட்டும், இந்த இரண்டு கூட்டணிகளிலும் இடம் பெறாமல், மதில் மேல் பூனை போல் உள்ளார்.அவரது இந்த நிலை, கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. 'தேர்தலுக்கு இன்னும் குறுகிய காலம் தான் உள்ளது. இது, லோக்சபா தேர்தல் நேரம். தேசிய அளவிலான ஏதாவது ஒரு கூட்டணியில் இடம் பெற்றால் தான், அடுத்து அமையும் அரசில் அமைச்சரவையில் இடம் பிடிக்க முடியும். 'தனியாக போட்டியிட்டு வெற்றி பெற்றாலும், எந்த பயனும் இல்லை. ஆனால், எங்கள் தலைவர் இன்னும் அமைதியாக இருப்பதை பார்த்தால், அவருக்கு தேர்தலில் ஆர்வம் இல்லையோ என தோன்றுகிறது...' என, கவலைப்படுகின்றனர்.