| ADDED : செப் 03, 2026 01:57 AM
'என்ன தான் இருந்தாலும், முதல்வர் என்ற முக்கிய பொறுப்பில் இருப்பவர், இவ்வளவு தரம் தாழ்ந்து பேசியது சரியல்ல...' என, தெலுங்கானா மாநில அரசின் காங்கிரஸ் முதல்வரான ரேவந்த் ரெட்டி பற்றி கூறுகின்றனர், அம்மாநில மக்கள். தெலுங்கானா முன்னாள் முதல்வரும், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ், 'எங்கள் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களில், 50 சதவீதம் கூட தற்போதைய காங்., ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை' என, ரேவந்த் ரெட்டியை விமர்சித்திருந்தார். இதனால் கடுப்பான ரேவந்த் ரெட்டி, 'சந்திரசேகர ராவ், அவருடன் என்னை ஒப்பிடுகிறார்; இதை ஏற்கவே முடியாது. கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை...? கழுதை மீது குதிரை போல பெயின்ட் அடித்தாலும், அந்த கழுதையால் குதிரை பந்தயத்தில் பங்கேற்க முடியுமா...? முதல் சுற்றிலேயே கழுதை படுத்து விடும்...' என்றார். ரேவந்த் ரெட்டியின் இந்த ஒப்பீடு, பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியினரை மட்டுமல்லாமல், தெலுங்கானா மக்களையும் கோபமடைய செய்துள்ளது. 'சந்திரசேகர ராவுக்கு, 72 வயதாகிறது. நாட்டில் உள்ள மூத்த அரசியல் தலைவர்களில் இவரும் ஒருவர். இரண்டு முறை தெலுங்கானா முதல்வராக பதவி வகித்துள்ளார். ஆனால், அரசியலில் பெரிய அனுபவம் இல்லாத, 56 வயதாகும் ரேவந்த் ரெட்டி, அவரை இப்படி தரக்குறைவாக பேசி, தன் மரியாதையை தானே கெடுத்து கொள்கிறாரே...' என, தெலுங்கானா மக்கள் குமுறுகின்றனர்.