| ADDED : ஆக 24, 2026 10:58 PM
'சினிமா நடிகர்கள் மீது ஏன் இப்படி வெறித்தனமான அன்பு காட்டுகின்றனர்...?' என கவலைப்படுகிறார், கர்நாடக அரசின் காங்கிரஸ் முதல்வர் சிவகுமார். கன்னடத்தில் மிகவும் பிரபலமான நடிகர் தர்ஷன்; இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. இவரது பெண் தோழிக்கு, ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பிய ரேணுகாசாமி என்பவரை, 2024ல் தர்ஷன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அடித்து கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில், முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட தர்ஷன் கைதாகி, இரண்டு ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை விடுவிக்கக் கோரி, அவரது ரசிகர்கள் அவ்வப்போது போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சமீபத்தில், பெங்களூரு அருகே ராம் நகரில் நடந்த ஒரு விழாவில், முதல்வர் சிவகுமார் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேச எழுந்தபோது, அங்கு திரண்டிருந்த தர்ஷன் ரசிகர்கள், 'உடனடியாக எங்கள் தலைவரை விடுதலை செய்யுங்கள்...' என, தொடர்ந்து கோஷம் எழுப்பினர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், ரசிகர்களை சமாதானப் படுத்த மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. சிவகுமாரை ஒரு வார்த்தை கூட பேச விடாமல் ரசிகர்கள் கூச்சலிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த சிவகுமார், 'கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு கண்மூடித்தனமாக ஆதரவு தெரிவிப்பதை என்னவென்று சொல்வது...?' என புலம்பியபடியே, அங்கிருந்து கிளம்பினார்.