'வாழ்க்கையில் எந்த கவலையும் இல்லையெனில், உற்சாகம் தானாகவே வந்து விடும்...' என ஆந்திர மாநில முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு பற்றி கூறுகின்றனர், அங்குள்ள மக்கள். கடந்த 2019ல் நடந்த சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்த பின், சந்திரபாபு நாயுடுவும், அவரது கட்சியினரும் அனுபவித்த சிரமங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. அப்போது முதல்வராக இருந்த ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவரான ஜெகன்மோகன் ரெட்டி, பல்வேறு ஊழல் வழக்குகளை பதிவு செய்து, சந்திரபாபு நாயுடுவையும், அவரது கட்சியினரையும் கொடுமைப் படுத்தினார். இதன்பின், 2024ல் நடந்த சட்டசபை தேர்தலில், சந்திரபாபு நாயுடு வெற்றி பெற்று முதல்வர் பதவியில் அமர்ந்தார். பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில் அங்கம் வகிப்பதுடன், பிரதமர் மோடியுடன் நெருங்கிய நட்பில் இருப்பதால், ஆந்திராவுக்கு தேவையான திட்டங்களும், நிதியும் போதிய அளவில் கிடைத்து விடுகின்றன. இதனால், ஆட்சியை சந்தோஷமாக நடத்துகிறார் சந்திரபாபு நாயுடு. சமீபத்தில், ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் சர்வதேச பழங்குடியினர் தின நிகழ்ச்சி நடந்தது. இதில், பழங்குடி மக்கள் போல் உடையணிந்து, அவர்களுடன் சேர்ந்து பாரம்பரிய, 'திம்சா' நடனத்தை சந்திரபாபு நாயுடு ஆடினார். சந்திரபாபு நாயுடுவை இறுக்கமான மனிதராகவே பார்த்து பழக்கப்பட்ட ஆந்திர மக்கள், அவரது நடனத்தை பார்த்து, 'இது புதுசா இருக்கே...' என, ஆச்சரியப்பட்டனர்.