கிடைக்குமா முதல்வர் பதவி?
'முக்கியமான விஷயத்தை கையில் எடுத்துள்ளார்...' என, ராஜஸ்தான் துணை முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான தியா குமாரி பற்றி பேசுகின்றனர், அங்குள்ள சக அரசியல்வாதிகள். ராஜஸ்தானில், முதல்வர் பஜன்லால் சர்மா தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. துணை முதல்வராக உள்ள தியா குமாரி, ஜெய்ப்பூர் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர். கடந்த, 2023ல் நடந்த சட்டசபை தேர்தலின் முடிவில், இவருக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது; ஆனால், துணை முதல்வர் பதவிதான் கிடைத்தது. இரண்டு ஆண்டுகள் அமைதியாக இருந்த தியா, தற்போது தன் ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார்.ராஜஸ்தானின் மேவார் பிரதேசத்தை ஆண்ட மன்னர் மஹாராணா பிரதாப் சிங்கின், 485வது பிறந்த நாள் சமீபத்தில் அங்கு நடந்தது.இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தியா, 'ராணா பிரதாப் சிங் தலைமையிலான படையினருக்கும், முகலாய மன்னர் அக்பர் தலைமையிலான படையினருக்கும், 16ம் நுாற்றாண்டில் ராஜஸ்தானின் ஹல்டிகாட் என்ற இடத்தில் மிகப்பெரிய போர் நடந்தது. 'இந்த போரில், ராணா பிரதாப் சிங் வெற்றி பெற்றார். ஆனால், இங்குள்ள கல்வெட்டில், ராணா பிரதாப் சிங் தோல்வி அடைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த கல்வெட்டை மாற்றி எழுதுவதற்காக, மக்களை திரட்டி போராட்டம் நடத்துவேன்...' என, அதிரடியாக அறிவித்தார். இதைக் கேட்ட சக அரசியல்வாதிகள், 'மக்கள் செல்வாக்குடன் முதல்வர் பதவியை பிடிப்பதற்கு, தியா குமாரி மறைமுகமாக காய் நகர்த்துகிறாரோ...?' என, கிசுகிசுக்கின்றனர்.