உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தினமலர் பவள விழா / உன்னதமான நடுநிலை நாளிதழ் தினமலர்

உன்னதமான நடுநிலை நாளிதழ் தினமலர்

'உண்மைகள் புனிதமானவை; கருத்துக்கள் சுதந்திரமானவை' என்ற, சி.பி.ஸ்காட்டின் மேற்கோளுக்கு ஏற்ப, ஒரு உன்னதமான நடுநிலை நாளிதழாக 'தினமலர்' திகழ்கிறது. சமுதாயத்திற்கு இன்றியமையாத சேவைகளை ஆற்றிடும், 75ம் ஆண்டு பவள விழா கொண்டாடும் 'தினமலர்' குழுமத்திற்கும், அதன் ஊழியர்கள் மற்றும் வாசகர்களுக்கு எனது பாராட்டுகள். ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்து, ஐ.ஐ.டி., கான்பூரில் பொறியியல் பட்டம் பெற்று, அமெரிக்காவில் உயர் கல்வி பயின்று, 1993ம் ஆண்டில் இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாக தேர்வு பெற்று, 'வந்தாரை வாழவைக்கும்' தமிழகத்தில் பணிபுரிய வந்தேன். 1995ம் ஆண்டு கடலுாரில் சார் - ஆட்சியாராக பதவியேற்றேன். அந்த காலகட்டத்தில், தமிழ் மொழி கற்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தபோது, நான் தமிழ் நாளிதழ்களை வாசிக்க துவங்கினேன். அரசியலில் இருந்து அறிவியல், ஆன்மிகம் வரை அனைத்து வகையான செய்திகளையும் உள்ளடக்கிய, தினமலரை படிக்கும்போது, பண்பாடுமிக்க தமிழக மக்களையும், பாரம்பரியமிக்க தமிழ் சமுதாயத்தையும் புரிந்து கொள்ள முடிந்தது. தமிழ் மக்கள், தங்கள் மொழி மற்றும் கலாசாரத்தின் மீது, எந்த அளவிற்கு பற்று வைத்திருக்கின்றனர் என்பதையும் உணர்ந்தேன். திருநெல்வேலி, தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஆட்சியராக இருந்த போது, அன்றாட நிகழ்வுகளை அறிந்து செயலாற்ற 'தினமலர்' செய்திகள் பெரிதும் உதவின. அதனைத் தொடர்ந்து, 'ஆவின்', உயர் கல்வித்துறை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை ஆகியவற்றில், பல்வேறு பொறுப்புகளில் இருந்தபோதும், பொதுமக்களின் அன்றாட பிரச்னைகள் மற்றும் தேவைகளை அறிந்து பணியாற்றிட, 'தினமலர்' செய்திகள் துாண்டுகோலாக இருந்தன. அதேபோல், அரசின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை, பொதுமக்களுக்கு தெரிவிப்பதிலும், 'தினமலர்' மிக சிறந்த, நடுநிலை மாறாத ஊடகமாக உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு செப்., முதல் தமிழகத்தில், மத்திய அரசின் கீழ் இயங்கும், காமராஜர் மற்றும் சென்னை துறைமுகங்களின் தலைவராக பணிபுரிந்து வருகிறேன். அரசாங்க பணிகளை, ஆங்கில மொழி வழியில் செய்ய நேர்ந்தாலும், இன்றளவும் தொடர்ந்து காலையில், நான் படிக்கும் தமிழ் நாளிதழ்களில் 'தினமலர்' முதன்மையானது. கடந்த 30 ஆண்டுகளாக, 'தினமலர்' எங்கள் குடும்பத்தில், ஒரு அங்கமாக விளங்குகிறது. எனது தமிழ் மொழித்திறனை வளர்த்துக் கொள்ள, 'தினமலர்' செய்தித்தாளும் முக்கிய பங்காற்றி உள்ளது எனக் கூறுவதில், பெருமிதம் கொள்கிறேன். 1951ம் ஆண்டில் துவக்கப்பட்டு, அர்ப்பணிப்புடன் நுாற்றாண்டை நோக்கிய, தினமலரின் வெற்றிப் பயணத்துக்கு, எனது மனமார்ந்த வாழ்த்துகள். சுனீல் பாலீவால் ஐ.ஏ.எஸ்., தலைவர், சென்னை துறைமுக ஆணையம் மற்றும் காமராஜர் துறைமுக நிறுவனம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை