| ADDED : நவ 20, 2025 09:53 AM
முன்னணி தமிழ் நாளிதழ்களில் ஒன்றான 'தினமலர்' நாளிதழ், தனது 75வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மக்கள் சேவை மற்றும் தேச நலனுக்காக, 1951ம் ஆண்டு, சமூக சிந்தனையாளரும், அறிஞருமான டி.வி.ராமசுப்பையர் அவர்களால் தொடங்கப்பட்ட 'தினமலர்' நாளிதழ், உண்மை, நேர்மை, தெளிவு மற்றும் சமூக பொறுப்புணர்வு ஆகிய அம்சங்களைக் கடைபிடித்து, கடந்த 75 ஆண்டுகளாக பத்திரிகை துறையில் தனியிடத்தை பெற்றுள்ளது. செய்திகளை உண்மையாகவும் நம்பகத்தன்மையுடனும் நடுநிலையுடனும் விரைவாக மக்களுக்கு வழங்கி, ஜனநாயகத்தின் நான்காவது துாணாக, 'தினமலர்' குறிப்பிடத்தக்க பங்களித்து வருகிறது. காட்சி ஊடகங்களும் சமூக ஊடகங்களும் பல்கிப் பெருகியுள்ள இன்றைய காலகட்டத்திலும், பலதரப்பட்ட வாசகர் வட்டத்தை தன்வசம் கொண்டு இன்றளவும் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் 'தினமலர்', சமூக நலனுக்காக வருங்காலங்களிலும் அசைக்க முடியாத உறுதியுடன் செயல்பட வேண்டும். 'தினமலர்' தனது பவள விழாவைக் கொண்டாடும் சிறப்புமிக்க இத்தருணத்தில், அங்கு பணிபுரியும் நிர்வாகத்தினர், பத்திரிகையாளர் நண்பர்கள் மற்றும் வாசகர்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ரங்கசாமி முதலமைச்சர், புதுச்சேரி