| ADDED : மார் 18, 2024 12:26 AM
பந்தலுார்:பந்தலுார் அருகே எருமாடு, பள்ளியரா பழங்குடியின கிராமத்தை சேர்ந்தவர் ராஜன்,39. நல்ல நிலையில் இருந்தார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், கூரை மாற்றும் பணியில் ஈடுபட்டு இருந்தபோது, வீட்டு கூரையிலிருந்து தவறி விழுந்து விட்டார். அப்போது, வீட்டு சுவர் இடிந்து இவரின் கால் மீது விழுந்ததில் இரண்டு கால்களும் உடைந்து போனது.சிகிச்சைக்குப் பின் வாக்கர் உதவியுடன் நடக்கும் இவரால் எந்த வேலையும் செய்ய முடியாமல் போனது. மனம் தளராமல் கொட்டாங்குச்சிகள் மூலம் கலைநயம் மிக்க பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இது குறித்து, கடந்த, 9ல் 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. அதனைப் பார்த்த கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தயாளன், பாதிக்கப்பட்ட பழங்குடியின இளைஞரை நேரில் சந்தித்து கடனுதவி வழங்க அறிவுறுத்தினார்.தொடர்ந்து, மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் வெற்றிவேலன், மேலாளர் சாரி, கிளை மேலாளர் கிரீஜா உட்பட பலர், ராஜன் வீட்டிற்கு சென்று, முதல் கட்டமாக தொழிலை மேம்படுத்தும் நோக்கில் கடன் சங்க மூலம், 10- ஆயிரம் ரூபாய் வட்டி இல்லா கடன் வழங்கப்பட்டது.மேலாளர் வெற்றிவேலன் கூறுகையில்,''தொழில் செய்து முறையாக கடனை திரும்ப செலுத்தினால், விரைவில், எருமாடு பஜாரில் பெட்டிக்கடை அமைத்து தர கடனுதவி வழங்கப்படும்,'' என்றார். இதனால், ராஜன் மகிழ்ச்சி அடைந்தார்.