பழையசீவரம் பாலாற்று பாலம் சீரமைப்பு
வாலாஜாபாத்,:'தினமலர்' நாளிதழில் வெளியான செய்தியையடுத்து, பழையசீவரம் பாலாற்று பாலத்தின் மீது ஏற்பட்டுள்ள பள்ளங்கள் நெடுஞ்சாலைத் துறை சார்பில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. வாலாஜாபாத் - செங்கல்பட்டு சாலையில் பழையசீவரத்தில் இருந்து, திருமுக்கூடல் செல்லும் பாலாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்த பாலத்தின் வழியாக 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயணம் செய்கின்றனர். பேருந்து, வேன், கார், இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி, 10 ஆண்டுகளாக திருமுக்கூடல் சுற்றுவட்டாரத்தில் இயங்கும் கல் குவாரி மற்றும் கிரஷர் உள்ளிட்ட வாகனங்களும் அதிகம் இயக்கப்படுகிறது. இதனால், இந்த மேம்பாலத்தில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர். ஏற்கனவே மின்விளக்கு வசதி இல்லாத இந்த பாலத்தில், பள்ளங்கள் அதிகம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்திற்குள்ளாகி வந்தனர். விபத்து அபாயம் தவிர்க்கும் பொருட்டு பழையசீவரம் பாலாற்று பாலத்தில் ஏற்பட்டுள்ள அபாயகரமான பள்ளங்களை சீரமைக்க வாகன ஓட்டிகள் பலரும் கோரி வந்தனர். இதுகுறித்த செய்தி, நம் நாளிதழில், கடந்த 21ம் தேதி படத்துடன் செய்தி வெளியாகி இருந்தது. அதையடுத்து, நெடுஞ்சாலைத் துறை சார்பில், பழையசீவரம் பாலாற்று பாலத்தில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ள பகுதிகளில் தார் ஊற்றி சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.