| ADDED : டிச 05, 2025 08:07 AM
திருப்பூர்: குன்னத்துாரை சேர்ந்த பழனியப்பன் என்பவர், புதிய வீடு கட்டுவதற்காக, தற்காலிக மின் இணைப்பு பெற்றிருந்தார். கட்டுமான பணிகள் அனைத்தும் முடிந்ததையடுத்து, நிரந்தர வீட்டு இணைப்பாக மாற்ற விண்ணப்பித்திருந்தார். 50 நாட்களாகியும் தற்காலிக இணைப்பு, நிரந்தர இணைப்பாக மாற்றம் செய்யப்படவில்லை. கடந்த நவம்பர் மாதம் மின் கணக்கீடு செய்யப்பட்டு, 16,693 ரூபாய் மின் கட்டணம் வந்தது. செங்கப்பள்ளி செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடந்த, ஊத்துக்குளி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டத்தில், அதிக மின் கட்டணம் வந்தது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. 'நிரந்தர மின் இணைப்பு கோரி அளிக்கப்பட்ட விண்ணப்பம் தொலைந்துவிட்டதாக' மின்வாரிய அலுவலர்கள் தெரிவித்தனர். இந்த செய்தி, நேற்று 'தினமலர்' நாளிதழில், வெளியானது. இதன் எதிரொலியாக, தற்காலிக மின் இணைப்பை, வீட்டு இணைப்பாக மாற்றம் செய்தும், மின் கட்டணத்தை, 16,693 ரூபாயிலிருந்து, 7,695 ரூபாயாக சரி செய்தும் மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.