தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: பத்து ஆண்டுகளாக சிறப்பான ஆட்சி தந்துள்ளார் மோடி. பல்வேறு மொழிகள், கலாசாரம் உடைய நாட்டை ஒரு குடைக்குள் கொண்டு வந்து சிறப்பான ஆட்சி தந்துள்ளார். இது, மூன்றாவது முறையாக பிரதமராக மோடி வருவதற்கான தேர்தல். உங்களில் ஒருவனாக லோக்சபா தேர்தலில் என்னை தேர்வு செய்தால், ராமநாதபுரம் தொகுதியில் தங்கி குடிநீர் உட்பட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண்பேன்.டவுட் தனபாலு: அ.தி.மு.க., ஆட்சியில், ஒன்றுக்கு மூன்று முறை முதல்வர் பதவியை வகித்தவர் நீங்க... அதுல ஒரு சாதனையை சொல்லி உங்களால ஓட்டு கேட்க முடியலையா... பிரதமர் மோடியின் சாதனைகள் பின்னாடி ஒளிந்து தான், ஓட்டு கேட்கணுமா என்ற, 'டவுட்' வருதே!ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்: தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஐ.பி.எஸ்., அதிகாரி. அவர், நாட்டிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்து, அரசு பணியை விட்டு அரசியலில் சேர்ந்துள்ளார். அவர் நினைத்தால், தி.மு.க., விலோ, அ.தி.மு.க.,விலோ சேர்ந்து உயர் பொறுப்பில் வந்திருக்கலாம். ஆனால் அவர், தமிழகத்தின் இளைஞர்களை உயர்த்தும் பாதையை தேர்ந்தெடுத்து, பா.ஜ.,வில் சேர்ந்துள்ளார்.டவுட் தனபாலு: பிரதமர் மோடி பேச்சின் போதும், அண்ணாமலை பற்றி இதே கருத்தை தான் தெரிவித்தார்... நீங்களும் அதையே சொல்றீங்களே... உங்க இருவருக்கும், 'ஸ்கிரிப்ட்' எழுதி கொடுத்தவர், கொஞ்சம் மாத்தி எழுதியிருக்கக் கூடாதா என்ற, 'டவுட்'தான் வருது!பா.ஜ., தேசிய தலைவர் நட்டா: தமிழகத்திற்கு வழக்கமாக வழங்கும் தொகையை விட, நான்கு மடங்கு அதிகமாக மத்திய அரசு வழங்குகிறது. தமிழகத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு, திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. டவுட் தனபாலு: மத்திய அரசு நாலு மடங்கு என்ன, 40 மடங்கு கூட அதிகமா தந்திருக்கலாம்... ஆனா, சென்னையிலயும், தென் மாவட்டங்கள்லயும் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு ஒரு ரூபாய் கூட மத்திய அரசு நிவாரணம் தரலன்னு, தி.மு.க.,வினர் சொல்றாங்களே... அதுக்கு உங்களிடம் பதில் இருக்குதா என்ற, 'டவுட்' எழுதே!