உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் நேரு: சேலத்தில் இன்று நடக்கும் தி.மு.க., இளைஞர் அணி மாநில மாநாட்டில், 20க்கும் மேற்பட்ட முன்னணி தலைவர்கள் பேசுகின்றனர். மாலையில், பொதுச்செயலர் துரைமுருகன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், இளைஞரணி செயலர் உதயநிதியை தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார்.டவுட் தனபாலு: மாநாட்டுல பேசப் போற எல்லா தலைவர்களுமே சொல்லி வச்ச மாதிரி, 'உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி தரணும்'னு கோரஸ் பாடுவாங்க... அவங்க அப்படி பேசுறப்ப, தொண்டர்களின் கைதட்டலும், விசிலும் துாள் பறக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!முன்னாள் முதல்வர் ஜெ.,யின் தோழி சசிகலா: பெங்களூரில் இருந்து தமிழகம் திரும்பிய போது, ஜெயலலிதாவுக்கு கோடநாடு எஸ்டேட்டில் நினைவிடம்அமைக்க வேண்டும் என தீர்மானித்தேன். கோடநாடு சுற்றுலா இடமாக உள்ளது. அதனால், சுற்றுலா பயணியரும் ஜெயலலிதா நினைவிடத்துக்கு வந்து செல்வதற்கு ஏதுவாக, எஸ்டேட்டின் சாலையோர இடத்தில் நினைவிடம் அமைக்கப்படும். இது, வரும் ஆகஸ்டில் திறக்கப்படும். அங்கு ஜெயலலிதாவுக்கு சிலையும் வைக்கப்படும். டவுட் தனபாலு: உங்க தோழிக்கு நீங்க செய்ய வேண்டிய கடமையை செய்றீங்க... அதே நேரம், சென்னையில ஜெ.,க்கு கட்டியிருக்கிற நினைவிடத்தையும் விட, பிரமாண்டமான நினைவிடத்தை கோடநாட்டில் நீங்க அமைத்தால், 'டவுட்'டே இல்லாம தங்களது நட்பை பாராட்டலாம்!பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: 'தமிழகத்தில், ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை அதிக அளவாக 4,000 மெகாவாட் வரை மின் பற்றாக்குறை ஏற்படக்கூடும்' என்று தென்மண்டல மின்பகிர்மான மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த பற்றாக்குறையை சமாளிக்க, மின் உற்பத்தித் திறனை அதிகரித்தல், வெளிச் சந்தையில் இருந்து மின்சாரம் வாங்குதல் உள்ளிட்ட நடவடிக் கைகளை மின்வாரியம் மேற்கொள்ள வேண்டும்.டவுட் தனபாலு: மின் உற்பத்தி திறனை எல்லாம் இப்போதைக்கு அதிகரிக்க மாட்டாங்க... வெளிச்சந்தையில கூடுதல் விலைக்கு மின்சாரத்தை வாங்கி, மின்வெட்டு இல்லாம பார்த்துக்குவாங்க... அதுல தான், ஆட்சியாளர்களுக்கு நிறைய, 'நன்மை' இருக்கு என்பதில், 'டவுட்'டே இல்லை!பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன்: பிரதமர் மோடி, மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, எவ்வித பிணையும் இல்லாமல் வழங்கும் கடன் உச்ச வரம்பை, 20 லட்சம் ரூபாயாக உயர்த்தி உள்ளார். பெண்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைவதற்கான வாய்ப்புகளை, பிரதமர் மோடி ஏற்படுத்தி வருகிறார். பெண்களுக்கு நிதி உதவி அளிக்கும் திட்டங்கள், மத்திய அரசால் தான் செயல்படுத்தப்படுகிறது.டவுட் தனபாலு: வாஸ்தவம் தான்... ஆனா, மாநில அரசு தரும் மகளிர் உரிமை தொகை, 1,000 ரூபாய் தானே மக்கள் மத்தியில பேசப்படுது... மத்திய அரசு திட்டங்களை, மாநில மக்களிடம் விளம்பரப்படுத்துவதில் உங்க கட்சியினர் ரொம்பவே பின்தங்கி இருக்காங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!சி.ஐ.டி.யு., தலைவர் சவுந்தரராஜன்: பஸ் தொழிலாளர்கள் கோரிக்கை குறித்து பேச்சு நடத்த, அமைச்சர் சிவசங்கர் வராதது வருத்தம் அளிக்கிறது. காலவரைக்கு உட்பட்டு எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற, தமிழக அரசு தயாராக இல்லை. வரும் 30ம் தேதி மாநிலம் தழுவிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டங்களும், கூட்டங்களும் நடத்த உள்ளோம்.டவுட் தனபாலு: இனி, வேலை நிறுத்தம் எல்லாம் பண்ண முடியாது... இப்படியே, ஆர்ப்பாட்டம், கூட்டம்னு நடத்திட்டே இருக்க வேண்டியது தான்... அதுக்குள்ள, லோக்சபா தேர்தலையும் அறிவிச்சிடுவாங்க... உங்க கோரிக்கைகள் எல்லாம், தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில் கண்டிப்பா இடம்பெறும் என்பதில், 'டவுட்'டே இல்லை!பத்திரிகை செய்தி: '2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கு குறித்த ஆடியோ பதிவை, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டதால், விரக்தியடைந்த தி.மு.க., - எம்.பி. ஆ.ராஜா, காணும் பொங்கல் பண்டிகைக்கு கறி விருந்து வைக்காததால், பெரம்பலுார் மாவட்ட தி.மு.க.வினர் ஏமாற்றம் அடைந்தனர்.டவுட் தனபாலு: அடடா... அண்ணாமலை அந்த வீடியோவை, பொங்கல் விடுமுறை முடிஞ்சு வெளியிட்டிருக்க கூடாதா...? கட்சியினரும் கறி விருந்து சாப்பிட்டுட்டு, தெம்பா திரும்பியிருப்பாங்களே... அவங்க எல்லாம் ராஜா மேல வருத்தப்படுறதை விட, அண்ணாமலை மேல தான் ஆத்திரத்துல இருப்பாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை