| ADDED : ஜூலை 29, 2024 01:27 AM
அலிகார்:உத்தர பிரதேசத்தில் அரசு ஆரம்ப பள்ளி ஆசிரியை, குழந்தைகளை விசிறியால் வீச செய்து, வகுப்பறையில் பாய் போட்டு படுத்து துாங்கிய, 'வீடியோ' சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.உ.பி.,யின் அலிகார் மாவட்டம் கோகுல்புர் கிராமத்தில், அரசு ஆரம்பப் பள்ளி உள்ளது. இங்கு பணியாற்றும் ஆசிரியை ஒருவர், மதிய உணவுக்கு பின் வகுப்பறையில் பாய் போட்டு உறங்கினார். கடுமையான வெயில் வாட்டி வதைப்பதால், படிக்கும் குழந்தைகளை விசிறியால் வீசும்படி உத்தரவிட்டுள்ளார். ஒரு மாணவர் ஆசிரியை தலைமாட்டில் அமர்ந்து விசிறியால் தொடர்ந்து வீசினார்.மற்ற மாணவர்கள், ஒவ்வொருவராக வந்து நின்றபடி ஆசிரியைக்கு மாறி மாறி வீசினர். இந்த காட்சியை பள்ளியில் பணியாற்றும் யாரோ ஒருவர் படம் பிடித்து பரப்பியுள்ளார். இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.தங்கள் பிள்ளைகளை ஆரம்ப பள்ளிக்கு படிக்க அனுப்பிய பெற்றோர், இந்த காட்சியை பார்த்து வேதனையை வெளிப்படுத்தினர். ஆசிரியைக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிகின்றன.இந்த அரசு பள்ளி, மாநில கல்வித்துறை இணையமைச்சர் சந்தீப் சிங் வசிக்கும் பகுதியில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும், ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.