உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / இரு கைகளை இழந்த வாலிபருக்கு முதன்முறையாக கார் ஓட்டுனர் உரிமம்

இரு கைகளை இழந்த வாலிபருக்கு முதன்முறையாக கார் ஓட்டுனர் உரிமம்

சென்னை: கைகளை இழந்தும் நம்பிக்கையை இழக்காத தான்சென் என்ற வாலிபர், தன் விடாமுயற்சியால், தமிழகத்தின் முதல் நபராக கார் ஓட்டுவதற்கான லைசென்ஸ் பெற்றுள்ளார்.சென்னை வியாசர்பாடி பெரியார் நகரைச் சேர்ந்தவர் தான்சென், 31. இவர், 10 வயதை நெருங்கிய போது, மின்சார விபத்தில் சிக்கி, மூட்டுக்கு கீழ் தன் இரண்டு கைகளையும் இழந்தார். தொடர் முயற்சியால், இன்ஜினியரிங் முடித்தார். தொடர்ந்து பி.எல்., முடித்து எம்.எல்., படித்து வருகிறார். தற்போது திருமணமாகி ஒன்றரை வயதில் மகள் உள்ளார். பிறரை சார்ந்து வாழ விரும்பாத இவர், ஸ்ரீவாரி சங்கர் மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் உதவியுடன், கார் ஓட்ட பழகி உள்ளார். தன்னம்பிக்கையுடன் ஓட்டுனர் உரிமம் பெற விண்ணப்பித்தார்.

அறிவுறுத்தல்

வட்டார போக்குவரத்து அலுவலர்களின் சோதனையின் போது, இவர் சில நடைமுறை சிக்கல்களை சந்திப்பதை உணர்ந்து, சென்னை கே.கே., நகரில் உள்ள புனர்வாழ்வு மருத்துவமனையின் உதவியை நாடும்படி பரிந்துரைத்தனர்.அங்கு, காரின் வடிவமைப்பை இவருக்கு ஏற்றாற்போல மாற்றவும், தானியங்கி, 'கியர்' முறையை கையாளும்படியும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், அம்மருத்துவமனையின் உடலியல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வியல் துறை இயக்குனர் திருநாவுக்கரசு, டாக்டர்கள் வளவன், அப்துல் உள்ளிட்டோரும் வழிகாட்டினர். பின், ரெட்டேரி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஓட்டுனர் உரிமம் பெற்று, தமிழகத்திலேயே முதல்முறையாகவும், நாட்டிலேயே மூன்றாவது நபராகவும் கைகள் இல்லாத கார் ஓட்டுனர் என்ற சாதனையை படைத்துஉள்ளார்.இதுகுறித்து, உடலியல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வியல் துறை இயக்குனர் பி.திருநாவுக்கரசு கூறியதாவது:மாற்றுத்திறனாளியான அவர் கார் ஓட்டுவதை பார்த்து, நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம். அதேநேரம், மற்றவர்களின் பாதுகாப்பு அம்சங்களையும் யோசித்தோம். வழக்கமாக, முழங்கை மூட்டு கைகளிலேயே காரின், 'ஸ்டேரிங்' பிடித்து ஓட்டிய அவருக்கு, பேலன்ஸ் சரியாக இருக்கிறதா என்பதையும் கண்டறிந்தோம்.

கண்காணிப்பு

மேலும், தானாக காரின் கதவை திறப்பது, 'சீட் பெல்ட்' அணிவது, அவசர நேரத்தில் 'பிரேக்' பிடிப்பது, 'ஹாரன்' அடிப்பது போன்றவற்றை மூன்று மாதங்களாக கண்காணித்து, சில பயிற்சிகளையும் வழங்கினோம். அவரது காரின் வடிவமைப்பிலும் சில மாற்றங்களுக்கு பரிந்துரைத்தோம். அதில், அவர் தேர்ச்சி பெற்று, எவ்வித இடர்ப்பாடும் இல்லாமல், சுயமாக கார் ஓட்டினார். எனவே, ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான பரிந்துரை அளித்தோம். தற்போது, ஓட்டுனர் உரிமம் பெற்றுள்ள அவர், மற்றவர்களை போல இயல்பாகவே, அனைத்து வகையிலும் கார் ஓட்டுகிறார்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ