ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சிறந்த உடற்பயிற்சி, நடைப்பயிற்சிதான் என்கின்றனர் உடற்பயிற்சி வல்லுனர்கள்.அதிகாலை எழுந்து அரை மணி நேரம் நடந்தால், சர்க்கரை, ரத்த அழுத்தம் குறைபாடுகளுக்கு 'குட்பை' சொல்லலாம் என்கின்றனர் டாக்டர்கள்.அதெல்லாம் சரி...முன்னோக்கி நடந்தால் நல்லதா, பின்னோக்கி நடந்தால் நல்லதா என்று கேட்டால், ''முன்னோக்கி நடப்பதுதான் நல்லது; ஆனால் எனக்கு, பின்னோக்கி நடப்பதுதான் அதிக பலன் தருகிறது,'' என்கிறார் மோகனச்செல்வன்.யார் இந்த மோகனச்செல்வன்?
ரேஸ்கோர்ஸ் பகுதிக்கு காலையில் சென்றால், தலையை சரித்தபடி பின்னோக்கி வாக்கிங் செல்லும் மோகனச்செல்வனை பார்க்கலாம். ''நான் நடைப்பயிற்சியை 20 ஆண்டுகளுக்கு முன் கல்லுாரியில் சேர்ந்த காலத்தில் துவங்கினேன். இன்று வரை தொடர்ந்து செய்து வருகிறேன். அதிகாலை 4:30 மணிக்கு நடைப்பயிற்சியை துவங்குவேன். ஆரம்ப காலத்தில் 5 கி.மீ., பயிற்சி செய்து வந்தேன். பிறகு எட்டு கி.மீ., துாரமாக அதிகரித்துள்ளேன்,'' என்கிறார் வியர்வையை துடைத்தபடி.''அதென்ன...எல்லோரும் முன்னோக்கி நடக்க, நீங்கள் மட்டும் பின்னோக்கி நடக்கிறீர்கள்?''
மோகனச்செல்வன் சிரித்தபடி, ''கண், காது, வாய், பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் மீது எனக்கு அன்பும், பரிவும் அதிகம். அவர்கள் தடுமாறியபடி நடப்பது ஆச்சரியமாகவும் வேதனையாகவும் இருந்தது. இப்படி ஒரு நிலை நமக்கு வந்தால், நம்மால் வாழ முடியுமா என்ற கேள்வி எழுந்தது. அதனால் 2006ம் ஆண்டுக்கு பிறகு, பின் நோக்கி நடக்க துவங்கினேன். அப்போதுதான் அவர்களின் சிரமம் புரிந்தது,'' என்கிறார்.''தடுமாற்றமாக இல்லையா?''
''ஆரம்பத்தில் தடுமாற்றம் இருந்தது. கொஞ்ச துாரம் தான் நடந்தேன். பிறகு கொஞ்சமாக அதிகரித்தேன். இப்போது என்னால் பின் நோக்கி, ஐந்து கி.மீ., வரை தடுமாற்றம் இல்லாமல் நடக்க முடிகிறது,''கோவை காந்திபுரம் பகுதியில் வசிக்கும் இவர், இடையர் பாளையம் பகுதியில் ஒரு ஆட்டோ மொபைல் நிறுவனத்தை நடத்தி வருகிறார். பின்னோக்கி நடக்கும்போது, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களால்தான் இவருக்கு பிரச்னை. முன்னோக்கி நகர்ந்து வரும் வாகனங்களும், மனிதர்களும் இவர் பின்னோக்கி வருவதை பார்த்து விலகிச் செல்வதை, நேரில் பார்க்க முடிந்தது.''சரி...பின்னால் நடப்பதால் என்ன பயன்?''
''இதனால் மனம் ஒருமைப்பாடு கிடைக்கிறது. பின் நோக்கி நடக்கும் போது, வேறு சிந்தனை மனதில் தோன்றாது. மூளை சுறுசுறுப்பாக இருக்கிறது. ஆழ்ந்த துாக்கம் கிடைக்கிறது. குதிக்கால் நரம்பு, முதுகு தண்டு வடப்பகுதி உறுதியாகிறது. ஒரு கி.மீ., பின் நோக்கி நடப்பது, 5 கி.மீ., முன் நோக்கி நடப்பதற்கு சமம். முதுகு தண்டுவடம் நேராக இருக்கும். உடல் சோர்வு இருக்காது. மூளை நரம்புகளுக்கு, ரத்த ஓட்டம் சீராக இருக்கும் என்றார் டாக்டர். அவர் சொன்னது போலவே, நாள் முழுவதும் மிகவும் புத்துணர்வுடன் இருக்க முடிகிறது,'' என்றார் மோகனச்செல்வன்.