மேலும் செய்திகள்
சர்வதேச பளு துாக்கும் போட்டி; தங்கம் வென்ற சிவகாசி பெண்
12-Dec-2025 | 1
மெட்ரோ ரயில் திட்டம் கொச்சினுக்கும், கோவைக்கும் ஒரே நாளில் தான் அறிவிக்கப்பட்டது. மத்தியில் ஆட்சி மாறிய பின்னும் நிதியைப் பெற்று, மாநில அரசின் நிதியையும் போட்டு, 2017 ஜூன் 17லேயே, கேரளாவில் மெட்ரோ ரயிலை இயக்கத் துவங்கி விட்டார்கள்.கோவையில் இன்றைக்கு வரைக்கும், மெட்ரோ ரயிலுக்கான ஒரு அடி தடம் கூட அமைக்கப்படவில்லை. முதற்காரணம், தொலைநோக்கும், அக்கறையும் இல்லாத தமிழக ஆட்சியாளர்கள்.இன்னும் வெளிப்படையாகச் சொல்வதென்றால், 2011-2016 வரையிலான அ.தி.மு.க., ஆட்சியில் இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக, ஒரு துரும்பையும் அசைத்துப் போடவில்லை. சொன்னாங்க...செய்யவேயில்லை!
மீண்டும் ஆட்சி தொடர்ந்தபோதும், ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட்டிலும் , 'சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும்', 'விரிவான திட்ட அறிக்கை' கோரப்படும்', 'இத்தனை ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் நிறைவேற்றப்படும்' என்று அறிவிப்புகள் வந்ததே தவிர, மெட்ரோ ரயில் திட்டத்துக்கு, திட்ட அறிக்கை தயாரிக்கவும் கூட முயற்சி எடுக்கப்படவில்லை.2021 சட்டமன்றத் தேர்தலின்போது, தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 'கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்' என்று வாக்குறுதி தரப்பட்டது.கோவைக்கு பிரசாரத்துக்கு வந்த ஸ்டாலினும், இதைப் பல இடங்களில் நீட்டி முழக்கினார். அதையேபட்ஜெட் போட்ட நிதியமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு இருவரும் மாறி மாறி அறிவித்தார்கள்.ஆனால் கடந்த மூன்றாண்டுகளில், விரிவான திட்ட அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டதைத் தவிர, இத்திட்டத்தில் வேறு எந்த முன்னேற்றமும் இல்லை.இத்தனைக்கும் இந்த திட்டம், தமிழக முதல்வரின் மகனும், அமைச்சருமான உதயநிதியின் வசமுள்ள சிறப்புத் திட்ட அமலாக்கத்துறையிடம் தான் உள்ளது. அவர் இதைப் பற்றி ஒரு முறை கூட வாய் திறக்கவில்லை. திராவிட கட்சியினர் சுடும் வடை!
உண்மையில் இந்தத் திட்டத்தைப் பொறுத்தவரை, வாயால் வடை சுடுவது திராவிடக்கட்சிகளின் தலைவர்கள் தான். இப்போது விரிவான திட்ட அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு, ஒப்புதலும் நிதிப் பங்களிப்பும் கோரப்பட்டுள்ளதாக புதுக் காரணத்தைச் சொல்லி, மீண்டும் கிடப்பில் போட்டுள்ளனர்.பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., அரசு, மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தபோதே, இத்திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரித்து, மத்திய அரசுக்கு அனுப்பியிருந்தால், அப்போதே நிதியைப் பெற்று, திட்டத்தைத் துவக்கியிருக்க முடியும். ஆனால் பாலங்களைக் கட்டியதில் காட்டிய அக்கறையை, அ.தி.மு.க., அரசு இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் துளியும் காட்டவில்லை. சென்னைக்கு மட்டும் வெண்ணெய்
தி.மு.க., அரசு வந்த பின்பு, அதற்கான சாத்தியமே இல்லாமல் போனது. சென்னை மெட்ரோவுக்கு பல ஆயிரம் கோடிகளை வாரி வழங்கும் தமிழக அரசு, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மட்டும், நிதியுதவி கோரி பன்னாட்டு நிறுவனங்களிடமும் கையேந்தி வருகிறது. விரிவான திட்ட அறிக்கைக்கு நிதியுதவி அளித்த, ஜெர்மன் நாட்டின் கே.எப்.டபிள்யு பன்னாட்டு வங்கி, 'முடியாது' என்று கைவிரித்து விட்டது.அதற்குப் பின், எந்த பன்னாட்டு வங்கியிடமும் நிதி பெற முடியாத நிலையில் தான், திட்ட அறிக்கையை மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பியுள்ளது. கடந்த பிப்.,19 ல் தான், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் அதைப் பெற்றுக் கொண்டுள்ளது. இதன் நிலை குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில், அத்துறையிடம் பதில் பெறப்பட்டுள்ளது.அந்த துறை அளித்துள்ள பதிலில், 'இதை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு, மாநில அரசுக்கே உள்ளது. இது பெரும் பொருட்செலவுள்ள திட்டம்; மாநில அரசால் அனுப்பப்படும் முன்மொழிவின் அடிப்படையில், இதற்கான தேவை மற்றும் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து, அதன்படி இத்தகைய திட்டங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி அளிக்கும்' என்று கூறப்பட்டுள்ளது.ஆக, திட்டத்துக்கு நிதியுதவி அளிக்க, மத்திய அரசு தயாராகவே உள்ளது. ஆனால் மத்திய அரசு நிதியுதவி அளித்து விட்டால், மாநில அரசின் நிதியையும் சேர்த்துத் திட்டத்தைத் துவக்கியாக வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதற்காகவே, முன்பிருந்த அ.தி.மு.க., அரசும், இப்போதுள்ள தி.மு.க., அரசும் இதைத் தட்டிக் கழித்து வருவதாக, சந்தேகம் எழுந்துள்ளது.மற்றொரு வகையில், 'கோவைக்கு இத்திட்டத்தை இப்போதைக்குக் கொண்டு வரக்கூடாது; இதை வைத்து இன்னும் பல தேர்தல்களுக்கு, அரசியல் செய்ய வேண்டும்' என்பதில் இரு திராவிடக்கட்சிகள் மட்டுமின்றி, தேசியக் கட்சிகளும் ஓரணியில் இருக்கின்றனவோ என்ற கேள்வியும், வருத்தமும் கோவை மக்களிடம் எழுவதைத் தவிர்க்கவே முடியவில்லை.லோக்சபா தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பத்தாண்டுகளாக ஆட்சியில் இருந்த போதும், மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தபோதும், இத்திட்டத்தைச் செயல்படுத்தாத அ.தி.மு.க., சார்பில், இத்திட்டம் குறித்த எந்த வாக்குறுதியையும், மக்கள் ஏற்கவாய்ப்பில்லை.கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று மீண்டும், மீண்டும் பொத்தாம்பொதுவான வாக்குறுதி கொடுப்பதை விட்டுவிட்டு, 'இத்தனை ஆண்டுக்குள் செயல்படுத்தப்படும்' என்று தி.மு.க.,வும், 'மத்திய அரசின் சார்பில் இவ்வளவு நிதி ஒதுக்கப்படும்' என்று பா.ஜ.,வும் உறுதியளிக்க வேண்டும். காலக்கெடுவும், கட்டாயமும் இன்றி தரப்படும் வாக்குறுதிகளால் எந்த பயனுமே இல்லை.கோவையின் எம்.பி., தொகுதி வேட்பாளர்கள், இது குறித்து 'பளிச்' என்று பதில் தருவது, காலத்தின் கட்டாயம்!
கோவை நகரின் மக்கள் தொகை, 20 லட்சத்தைக் கடந்து விட்டது; மாவட்டத்தில் 26 லட்சம் வாகனங்கள் ஓடுகின்றன; விபத்து உயிரிழப்பில் மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளது; தனிநபர் வாகன எண்ணிக்கை அதிகரிப்பதே இதற்கு காரணம். மக்கள் போக்குவரத்துத் திட்டம் இல்லாவிடில், போக்குவரத்து நெரிசலே கோவை நகரின் வளர்ச்சியை முடக்கிப் போட்டுவிடும் என்பதே, இத்திட்டம் விரைவாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று, தொழில் அமைப்பினரும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுக்க முக்கியக் காரணம்.
தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையில், அவினாசி ரோடு மற்றும் சத்தி ரோடுகளில் 39 கி.மீ., துாரத்துக்கு, இரண்டு வழித்தடங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. ஆனால் தற்போது வெளியிடப்பட்டுள்ள, கோவை மாஸ்டர் பிளான் வரைவில், ஐந்து வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயக்க வேண்டுமென்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உக்கடம்-கணியூர், உக்கடம்-சாய்பாபா காலனி-பிளிச்சி, தண்ணீர்ப்பந்தல்-சிங்காநல்லுார்-காரணம்பேட்டை, கணேசபுரம்-காந்திபுரம்-காருண்யா நகர், உக்கடம்-வெள்ளலுார் பஸ் முனையம் என ஐந்து வழித்தடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. காகிதத்திலேயே உள்ள ஒரு திட்டத்தை, வழித்தடத்தையாவது அமைத்து கண்ணில் முதலில் காட்டுங்கள் என்பதே, கோவை மக்களின் கோரிக்கை.
12-Dec-2025 | 1