திருப்பூர்;கண்ணுக்கு விருந்தாக, 'கலர்புல்' சுவரோவியங்கள் வரைந்துள்ளது, வாகன ஓட்டிகளுக்கு புதிய உற்சாகம் அளிப்பதாக, மகிழ்ச்சி அடைகின்றனர் திருப்பூர் மக்கள்.'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், பல்வேறு பணிகள் நடப்பது வரவேற்கத்தக்கது என்றாலும், அதனால் ஏற்படும் அவதியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இரண்டு பொங்கல் விழாவை கண்ட பிறகும், நொய்யல் சீரமைப்பு பணி நிறைவடையவில்லை.ஊத்துக்குளி ரோட்டில் உள்ள, சுரங்க பாலம், 30 ஆண்டுகள் கடந்தது; இன்றும் கம்பீரமாக காட்சியளிக்கிறது; எவ்வளவு மழை பெய்தாலும், பாலத்தில் தண்ணீர் தேங்காது. மாநகராட்சி திட்டங்களில் ஒன்றாக, சுவரோவியம் வரையும் பணியும் நடந்து வருகிறது.மாநகராட்சி சுற்றுச்சுவரில் வரைந்த ஓவியம், மாவட்டத்தின் சிறப்புகளை பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது.இந்நிலையில், ஊத்துக்குளி ரோடு, தபால் ஆபீஸ் அருகிலுள்ள சுரங்கபாலத்தை, பக்கவாட்டில், பல்வகை கலர்களால் பெயின்ட் அடித்து மெருகேற்றியுள்ளனர். விழிப்புணர்வு ஓவியம்
சுரங்கபாலத்தின் பக்கவாட்டில் உள்ள தடுப்புகான்கிரீட் முதல், தரைத்தளம் வரை, பல்வகை கலர்களால் புதுப்பித்துள்ளனர். குறிப்பாக, பாலத்தின் இருபுறமும், விழிப்புணர்வு சுவரோவியங்கள் தத்ரூபமாக வரையப்பட்டு வருகிறது.மழைநீர் சேகரிப்பு, சாலை பாதுகாப்பு, வாகன பயணம், மண் வளம் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு என, பல்வகை விழிப்புணர்வு அம்சங்களுடன், ஓவியங்கள் தீட்டும் பணி, ஜோராக நடந்து கொண்டிருக்கிறது.உண்மையாலும், வெள்ளை பூச்சுக்கு மாற்றாக, சுரங்கபாலத்துக்கு பலவகை வண்ணங்களால் அலங்கரித்த போது, டென்ஷனாக சென்றாலும் புதிய உற்சாகம் உருவாகிறது. குறுகிய ரோடு என்பதால், பக்கவாட்டில் உள்ள ஓவியங்களை பார்த்து ரசித்துக்கொண்டிருக்க முடியாது; இருந்தாலும், விழிப்புணர்வு ஓவியங்கள் கண்ணையும், கருத்தையும் கவரும் வகையில் உள்ளதாக, பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.