வீரபாண்டி : 'கஜா' புயல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க, இரு கிராமத்தினர், விடிய விடிய சப்பாத்திகளை சுட்டுக் கொடுத்தனர்.சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி அருகே, சென்னகிரி மற்றும் இருசனம்பட்டி கிராமங்களைச் சேர்ந்த, 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள், 'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, தங்கள் பகுதிமக்களிடம் கோரிக்கை விடுத்தனர். அதன்மூலம், அரிசி, பருப்பு, நுாடுல்ஸ் பாக்கெட்கள், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, பாய், போர்வை, துண்டுகள் என, 30 ஆயிரம் ரூபாய் மதிப்பில், பொருட்களை சேகரித்தனர்.நேற்று முன்தினம் மாலை, அப்பகுதி பெண்கள், பெரியவர்கள், பாதிக்கப்பட்ட மக்களின் பசியாற்ற, சப்பாத்திகளை தயார் செய்து தர முன்வந்தனர். வீடு வீடாக கோதுமை மாவு சேகரித்து, வீடுகளிலிருந்து எரிவாயு அடுப்பு, தோசைக் கற்களை எடுத்து வந்து, வீதியில் வைத்து, விடிய விடிய, 1,000 சப்பாத்திகளுக்கு மேல் சுட்டனர். மேலும், தக்காளி சட்னியும் தயாரித்தனர். நேற்று காலை, நிவாரண பொருட்களுடன், சப்பாத்தியை அனுப்பினர்.