| ADDED : நவ 19, 2025 08:04 AM
மதுரை: சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த சேலம் பெண் டாக்டரின் உடல் உறுப்புகள் ஐந்து நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது. சேலம் மாரமங்கலத்துப்பட்டியைச் சேர்ந்த டாக்டர் ராகினி 25, தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் முதுகலை மருத்துவம் (எம்.டி.) படித்து வந்தார். நவ.16 விபத்தில் சிக்கி தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டார். அன்றிரவே மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். நேற்று (நவ.18) மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் உறுதி செய்தனர். ராகினி குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளைத் தானம் செய்ய சம்மதித்தனர். கல்லீரல், ஒரு சிறுநீரகம் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் இருந்த இரண்டு நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது. மற்றொரு சிறுநீரகம் திருச்சி காவேரி மருத்துவமனைக்கும், நுரையீரல் சென்னை மருத்துவமனைக்கும் , கருவிழிகள் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டன. மருத்துவத்துறை இணை இயக்குநர் செல்வராஜ், தேனி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் முத்து சித்ரா, மருத்துவமனை நிர்வாகத்தினர், சக மருத்துவ மாணவர்கள் ராகினி உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தி, குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். அவரது இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடந்தது.