வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நம் நாட்டில் இருக்கும் மக்கள் தொகைக்கு எந்த பதவி ஒய்வு பெரும் வயதை நீட்டிப்பது வேலையில்லா திண்டாட்டத்தை அதிகமாகும் .திருட்டு த்ரவிட கட்சி அரசு இரண்டும் கேவலமான ஆட்சி
எஸ்.நந்தன், விருதுநகரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'பா.ஜ.,வை தோற்கடித்து, டில்லியைக் காப்போம்' என்ற தேர்தல் முழக்கத்துடன், கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து, டில்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடுகின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான பிருந்தா காரத், 'டில்லியைக் காக்க, பா.ஜ.,வை தோற்கடிப்போம். மொத்தம் ஆறு தொகுதிகளில் போட்டியிடுகிறோம்; மற்ற தொகுதிகளில், பா.ஜ.,விற்கு எதிராக பிரசாரம் செய்வோம்' என்று முழங்கி உள்ளார். பா.ஜ., மத்திய அரசை அல்லவா வழி நடத்திக் கொண்டிருக்கிறது... அக்கட்சியை தோற்கடிக்க வேண்டுமானால், பார்லிமென்ட் தேர்தலில் அல்லவா போட்டியிட்டு இருக்க வேண்டும்!டில்லி சட்டசபை தற்போது, ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவாலின் பின்னணி நிர்வாகத்தில் அல்லவா இயங்கிக் கொண்டிருக்கிறது...டில்லியை காப்பாற்ற வேண்டுமென்பது தான், பிருந்தா காரத்தின் உண்மையான நோக்கமென்றால், ஊழல் சேற்றில் மூழ்கி, முத்தெடுத்துக் கொண்டிருக்கும், ஆட்சி அதிகாரத்தில் உள்ள ஆம் ஆத்மி கட்சியை அல்லவா எதிர்த்து போட்டியிட வேண்டும்?அதை விடுத்து, ஊழலின் ஊற்றுக்கண்களாக திகழும் ஆம் ஆத்மியோடு கூட்டணி வைத்தபடி, 'டில்லியைக் காப்போம்' என்பது வேடிக்கையாக அல்லவா உள்ளது!உண்மையிலேயே ஊழலை ஒழித்து, டில்லியை சுத்தப்படுத்த வேண்டுமென்பது தான் பிருந்தாவின் லட்சியம் என்றால், டில்லி சட்டசபையில், 70 தொகுதிகளிலும் அல்லவா வேட்பாளர்களை நிறுத்தி இருக்க வேண்டும்... அதை விடுத்து, ஆறு தொகுதிகளில் போட்டியிட்டு, 'டில்லியை சுத்தப்படுத்துவோம்' என்று சபதம் செய்வது, 'ஜல்லிக்கரண்டியை வைத்து கப்பலை நிப்பாட்டுவேன்' என்பது போலல்லவா உள்ளது.காங்., வெற்றி பெற வாய்ப்பில்லை!
ஆர்.ரபீந்த், பெங்களூரு, கர்நாடக மாநிலத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'காங்கிரஸ் கட்சி வெற்றி பெற வேண்டும்; அதேநேரம், அவ்வப்போது தோல்வி அடையவும் வேண்டும்' என்று கூறியவர், மறைந்த,'துக்ளக்' இதழ் ஆசிரியர் சோ!எத்தனை சத்தியமான வார்த்தைகள்... ராகுல் எப்போது காங்., கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டாரோ, அன்றிலிருந்து அக்கட்சி படு பாதாளத்தை நோக்கி, பயணித்துக் கொண்டிருக்கிறது. ஆரம்ப காலத்தில் குறும்புத்தனம் செய்யும் சுட்டிக்குழந்தை போல் அரசியல் செய்து வந்த ராகுல், இப்போது, பாகிஸ்தான் தீவிரவாதி போல், கண்மூடித்தனமான, சுயநல அரசியல் செய்கிறார். ஆட்சியை கைப்பற்ற முடியாத இயலாமையையும், பொறாமையையும், வெளிநாடுகளில் இந்தியாவையும், பிரதமரையும் குறை சொல்லி, வசை பாடி தீர்த்துக் கொள்கிறார். சமீபத்தில், காங்., கட்சிக் கூட்டத்தில், காஷ்மீர் இல்லாத வரைபடத்தை வைத்து, மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தினர், கர்நாடக காங்கிரசார். அதுகுறித்து, ராகுல் தன் கட்சியினர் மீது என்ன நடவடிக்கை எடுத்தார்? மதச்சார்பின்மை பேசிக் கொண்டே, தீவிரவாத இயக்கங்களுடன் கூட்டணி வைத்துள்ளவர் தானே அவர்? இதுவரை, பார்லிமென்டில் ஏதாவது பயனுள்ள விஷயங்களை பேசிஉள்ளாரா?கட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து இப்போது வரை, ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சி தலைவராக, நாட்டு நலனில் அக்கறை கொண்டவராக, எந்த தருணத்திலாவது தன்னை வெளிப்படுத்தி உள்ளாரா? மதச்சார்பின்மை பேசியபடி பிரிவினைவாதிகளுடன் கை குலுக்கும் ராகுல், கட்சியில் நீடிக்கும் வரை, அடுத்த பார்லிமென்ட் தேர்தல் மட்டும் அல்ல; இனி எந்த தேர்தல் வந்தாலும், காங்., வெற்றி பெற வாய்ப்பே இல்லை!என்ன நியாயம் செய்தீர்கள்?
ப. ராஜேந்திரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க., மகளிர் அணியினர் தன், 57வது பிறந்த நாளுக்காக வழங்கிய புறாக்களைப் பறக்க விட்டு மகிழ்ந்துள்ளார், கனிமொழி எம்.பி., தி.மு.க., என்ற கூண்டுக்குள் ஏராளமான புறாக்கள், கூட்டணி தர்மம் என்ற பெயரில் தங்கள் கருத்துக்களை வெளியிட முடியாமல் முடங்கிக் கிடக்கின்றனவே... அவற்றுக்கு எப்போது விடுதலை கொடுத்து, பறக்க விடப் போகிறீர்கள்? எங்கோ சுதந்திரமாக இருந்த புறாக்களை, யாரோ எப்படியோ பிடித்து வந்து தர, அவற்றை பறக்க விட்டு மகிழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். அதேநேரம், எதிர்க்கட்சித் தலைவர்களின் புகைப்படத்துடன் இருந்த கேக்கை கத்தியால் வெட்டி, அதில் மகிழ்ச்சி அடைகிறீர்களே... இது தான், திராவிட மாடல் அரசின் கண்ணியமான நடத்தையா?கத்தியால் வெட்டும் அந்த கேக்கில் நீங்களும் இருக்கிறீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்! இன்று, கவர்னரை கண்டித்து, வீதிக்கு வந்து போராடும் கழகக் கண்மணிகளும், நீங்களும், உங்கள் ஆட்சியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவிக்கு என்ன நியாயம் செய்தீர்கள்? 'நெஞ்சுக்கு நீதி' எழுதியவரின் வாரிசுகள், தங்கள் நெஞ்சைத் தொட்டு சொல்லட்டும்!மனம் இல்லையே!
பி.மணியட்டி மூர்த்தி, கோவையில் இருந்து எழுதுகிறார்: ஜெயலலிதா மறைவுக்கு பின், ஆட்சிக்கு வந்த பழனிசாமி, ஓய்வு பெறும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பணம் கொடுத்து வீட்டுக்கு அனுப்பாமல், ஓய்வு பெறும் வயதை, 60 ஆக உயர்த்தினார். அன்றிலிருந்து இன்று வரை, அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்கள் வெறிச்சோடி கிடக்கின்றன. தமிழகத்தில், ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் மாணவர்கள் பொறியியல், மருத்துவம், சட்டம் போன்ற பல்வேறு துறைகளில் பட்ட மேற்படிப்பு முடித்து, அரசு பணி கிடைக்கும் என்ற நம்பிக்கையில், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்துள்ளனர். ஆனால், அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்திக் கொண்டே போவதால், படித்த இளைஞர்கள், வேலையின்மையால், கூலிப்படையில் சேர்வதும், மது, போதைப் பொருட்களுக்கு அடிமையாகி, கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், செயின் பறிப்பு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு, தங்கள் வாழ்க்கையை அழித்துக் கொள்கின்றனர். தற்போது, பல்வேறு அரசு துறைகளில், பல லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. லஞ்சம் வாங்காமல், அப்பணியிடங்களை நிரப்ப, திராவிட மாடல் அரசுக்கு மனமும் இல்லை; ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு பணம் கொடுத்து, அவர்களை வீட்டுக்கு அனுப்ப அரசு கஜானாவிலும் பணம் இல்லை.ஆக மொத்தம், மக்கள் வரிப்பணத்தை கொள்ளை அடிக்க மட்டும் இரு திராவிட அரசுகளுக்கும் மனமும், பணமும் தாராளமாக உள்ளன!
நம் நாட்டில் இருக்கும் மக்கள் தொகைக்கு எந்த பதவி ஒய்வு பெரும் வயதை நீட்டிப்பது வேலையில்லா திண்டாட்டத்தை அதிகமாகும் .திருட்டு த்ரவிட கட்சி அரசு இரண்டும் கேவலமான ஆட்சி