உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்

ஏன் குழப்புகிறார் கருணாநிதி? க.ஸ்டாலின் செல்வராஜ், உதவி கணக்கு அலுவலர் (பணி நிறைவு), விருதுநகரிலிருந்து எழுதுகிறார்: 'தூக்குத்தண்டனையைக் குறைக்கும் அதிகாரம், மாநில முதல்வருக்கு உண்டு' என, முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். அதற்கு ஆதாரமாக, 'கடந்த 1972ல் தியாகு, 1974ல் கலியபெருமாள் ஆகியோரின் தூக்குத் தண்டனைகள், என் முயற்சியால், ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டன' என்றும் கூறியுள்ளார். அச்சம்பவங்களுக்கும், தற்போது பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் நிலைப்பாடுகளுக்கும், நிறைய வேறுபாடுகள் உள்ளன. இந்த மூவரின் குற்றங்கள், ஐகோர்ட், மாநில கவர்னர், சுப்ரீம் கோர்ட், ஜனாதிபதி வரை பரிசீலனை செய்யப்பட்டு, கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, மரண தண்டனை உறுதிசெய்யப்பட்டது. முன்பு, 1972, 1974ல் நடந்த சம்பவங்கள், ஐகோர்ட் சென்ற நிலையில், மரணதண்டனை, மாநில முதல்வரின் பரிந்துரையால், ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இந்த மூவரின் விஷயத்தில், அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, நளினிக்கு மட்டும், மரண தண்டனையில் இருந்து, ஆயுள் தண்டனைக்கு பரிந்துரைத்துவிட்டு, மற்றவர்களுக்கு பரிந்துரைக்கவில்லை. இதை, முதல்வர் ஜெயலலிதா, சட்டசபையில், தற்போது தெளிவாக, தன் அறிக்கை மூலம் விளக்கியுள்ளார். சுப்ரீம் கோர்டும், ஜனாதிபதியும், கருணை மனுக்களை நிராகரித்தபின், ஒரு மாநில முதல்வருக்கு மரண தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் உண்டா, இல்லையா என்பது பற்றி, அரசியல் அமைப்பு விதிகளில் தெளிவான விளக்கங்கள் இல்லை. மேலும், இந்த மூவரின் மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக்க பரிந்துரை செய்து, சட்டசபையில், ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கும், ஜனாதிபதிக்கும், முதல்வர் ஜெயலலிதா அனுப்பியுள்ளார். 'இந்த தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது' என, மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியிருக்கிறார். உண்மை நிலை இவ்வாறு இருக்க, முன்னாள் முதல்வர், தேவை இல்லாமல், முரண்பாடான கருத்துக்களை தெரிவித்து, மற்றவர்களை குழப்புவது, தமிழகத்திற்கு நல்லது அல்ல.

அனுதாபம் வருகிறதே! வைகைவளவன், மதுரையிலிருந்து எழுதுகிறார்: மத்திய அமைச்சர்களின், சொத்து விவரங்கள் தெரிவிக்கப்பட வேண்டும் என்று சொன்னதற்கு இணங்க, பிரதமர் மன்மோகன் சிங், தன் சொத்து விவரத்தைத் தெரிவித்திருக்கிறார். அவருக்கு இருக்கும் மொத்தச் சொத்துக்களின் மதிப்பே, 4 கோடியே, 80 லட்சம் ரூபாய் தானாம். மத்திய அமைச்சர் அந்தோணிக்கு தான் மிகவும் குறைந்த அளவு சொத்துக்கள் இருக்கின்றனவாம். கேட்கவே மிகவும் பரிதாபமாக இருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் ஒரு மாவட்டச் செயலரே, 10 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் வைத்திருக்கும் போது, இந்தியாவில், 20 ஆண்டுகள் அரசியல் பணியாற்றும் பிரதமருக்கு, வெறும் ஐந்து கோடி ரூபாய் சொத்து தான் இருக்கிறதாம். பிழைக்கத் தெரியாத மனிதராக இருக்கிறாரே, நம் இந்திய பிரதமர் என்று தான், அவர் மீது அனுதாபப்பட வேண்டியுள்ளது. '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழலில், யார் யாரோ கோடிக்கணக்கில், எண்ணிக்கை தெரியாத அளவுக்கு சொத்துக்கள் சேர்த்திருக்கும்போது, நம் தேசத்தில் இப்படியும் ஒரு மனிதர் இருக்கிறார். விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்யத் தெரிந்தால் தான், கோடி, கோடியாக சொத்து சேர்க்க முடியும். பத்து தலைமுறைக்கு மேல் சொத்துக்களை அனுபவிக்க வழி செய்ய முடியும். அன்னா ஹசாரே என்னதான், போராடினாலும், நம் அரசியல்வாதிகள் மட்டும், திருந்தப் போவதில்லை. நல்ல மனிதர்கள் எல்லாம் கருவிலேயே உருவாகின்றனர். அந்த விஷயத்தில், காமராஜரின் தாயும், மகாத்மாவின் தாயும் புண்ணியவதிகள் என நினைத்து, பெருமைப்பட வேண்டும்.

படத்தை மாட்டுங்கள்! கோதை ஜெயராமன், மீஞ்சூரிலிருந்து எழுதுகிறார்: சமீபத்தில் பிரதமர் உட்பட, மத்திய அமைச்சர்கள், 68 பேர் தங்கள் சொத்து கணக்குகளை, இணைய தளத்தில் வெளியிட்டுள்ளனர். அதுபோல், மாநில அமைச்சர்களும், மத்திய, மாநில அரசு ஊழியர்களும் தங்கள் சொத்து விவரங்களையும், தங்கள் உறவுகளின் சொத்து விவரங்களையும், இணைய தளத்தில் வெளியிட வேண்டும். வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை தன் பெயரிலோ அல்லது தன் உறவினர் பெயரிலோ பதிவு செய்திருந்தால், அதை மீட்டு, அரசு சொத்தாக சேர்க்கும் வகையில், சட்டம் இயற்ற வேண்டும். லஞ்சம் பெறும்போது, கையும் களவுமாக பிடிக்கப்பட்டால், அவரது புகைப்படம் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை, அரசு அலுவலகங்களில் மாட்டி வைத்தால், லஞ்சமோ, சொத்துக்களோ வாங்குவது ஓரளவாவது குறைய வழி செய்யும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ